இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி - முப்பெரும் தேவியர் தரிசனம்

 



அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி ஆற்றல் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளாக காட்சி தரும் அந்த திருத்தலங்கள் முன்றும் சென்னை அருகில் அமைந்துள்ளன.


மேலூர், இது சென்னைக்கு அருகில் மீச்சூரை அடுத்து உள்ளது. இங்குள்ள ஸ்ரீ திருமணங்கீஸ்வரர் உடனுறை திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும் சென்னைக்கு வடதிசையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆதிபுரீஸ்வரர் உடனுறை வடிவுடை அம்மன் ஞானசக்தியாகவும் சென்னை அடுத்த ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீயீஸ்வரர் உடனுறை ஸ்ரீ கொடியிடை அம்மன் கிரியா சக்தியாகவும். என விளக்கி அருள்பாலிக்கின்றனர்.


மேலூரில் பாண்டிய மன்னன் ஒருவனின் உத்தரவுப்படி அம்மன் சிலை வடிக்க சிற்பி ஒருவன் கல் ஒன்றை தேர்வு செய்தான். அதை மலை உச்சியில் இருந்து கீழே கொண்டு வரும் பொழுது பிடி நழுவி உருண்டு பள்ளத்தில் விழுந்த அந்த கல் மூன்று துண்டுகளாக உடைந்து விட்டன.


மனம் பதறிய சிற்பி தவறுக்காக தன் கைகளைத் துண்டித்துக் கொள்ளப் போனான்; நில் என்ற அசரீரியுடன் பராசக்தி பிரசன்னமாகி ‘சிற்பியே கல் உடைந்ததற்காக கவலைப் படாதே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என மூவராக உருக் கொள்ளவே மூன்று பகுதிகளாக கவ் உடைந்துள்ளது. மூவரின் சிலைகளாக வடித்து விடு’ என கூறி மறைந்தாள்.


அதன் படி வடிக்கப்பட்டவை மேற்சொன்ன மூன்று தலங்களில் உள்ள அம்பிகைகள்.


இன்னொரு விசேஷம் என்னவெனில் இத்தலங்களில் உள்ள ஈசனின் சிவ லிங்கங்கள் மூன்றுமே சுயம்பு ஆகும். சென்னையைச் சுற்றிலும் ஃ போன்று அமைந்துள்ள இத் தலங்களை இணைக்க அந்த காலத்தில் சுரங்கப் பாதை இருந்ததாக தகவல்.


மேலூர் திருவுடையம்மன் கோயில் தல வரலாறு. ஆதிநாளில் அடர்ந்த காடுகட்டின் முட்புதர்களுக்கு மத்தியில் புற்று வடிவத்தில், நாகம் சூழ சுயம்புவாக ஒரு சிவலிங்கம் இருந்ததை கண்டனர் ஊர் மக்கள்.


மேலும் பசுக்கள் தினமும் தானே அந்த புற்றின் மேல் பால் பொழிவதையும், நாகங்கள் சில அப்பாலை குடித்து செல்வதையும் பார்த்தனர். அதன்பின் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பி திருமணங்கீஸ்வரர் என திருநாமதுடன் வழிபட்டுக்கு கொண்டு வந்தார்கள் ஊர் மக்கள்.


இப்போது ஸ்ரீதிருமணங்கீஸ்வரர் ஐம்பொன் கவசம் அணிந்து கண்கவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஸ்ரீதிருவுடையம்மன் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கோயில் அழகிய கிராமத்தின் மத்தியில் பழைமை மாறாமல் உள்ளது. திருவுடையம்மன் தரிசனம் மனதிற்கு பெரும் நிறைவை தரும்.


திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி மூலவர் ஆதிபுரிஸ்வரரும் ஒரு சுயம்பு மூர்த்தம் தான். இங்குள்ள அம்பாள் வடிவுடை நாயகி தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுகிறது . அன்னை சன்னதியில் நிற்பதே ஒரு ஆனந்த பரவசம் தான் என்கின்றனர் பக்தர்கள்.


திருவொற்றியூர் ஒரு பாடல் பெற்ற தலம். நாயன்மார்களில் ஒருவரான கலயனார் அவதரித்த தலமும் கூட. சுந்தரமூர்த்தி நாயனார் – சங்கிலி நாச்சியார் திருமணம் நிகழ்ந்தது இங்குதான். பட்டினத்தார் முக்தி அடைந்த தலம். வள்ளலார் வாழ்ந்த மண் என பல பெருமைக்குரியது.


வள்ளலாருக்கு அவரின் அண்ணியின் வடிவில் நேரில் வந்து உணவூட்டியவள் இத்தேவி. ஒவ்வொரு வாரமும் அன்னையின் உற்சவ விக்ரகமான சுக்கிரவார அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது.  


பட்டினத்தார், காளமேகம், அருணகிரிநாதர், தியாகயர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் சுவாமி, அம்பாள்மீது பாடல்களை  கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்


சென்னை அடுத்த அம்பத்தூர் – ஆவடிக்கு இடையே உள்ளது (வட) திரு முல்லைவாயல் திருத்தலம். இங்கு ஈசன் மாசிலாமணீயீஸ்வரர் என்ற திருநாமதுடனும் அம்பாள் கொடியிடை நாயகி என்ற திருநாமதுடனும் அருள்பாலிக்கின்றனர்.


தொண்டை மண்டல மன்னன் தன்னை எதிர்த்துப் போர் புரிந்த குறும்பர்களை ஒடுக்க திருமுல்லைவாயல் வந்தான். அவன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிப் புதர் சுற்றி சிக்கிக்கொண்டது. மன்னன் வாளால் கொடிகளை வெட்டிபோது; வாள் உள்ளே மறைந்து இருந்த சுயம்பு லிங்கத்தின் மேல் பட்டு ரத்தம் பீறிட்டு வந்தது.


அதிர்ந்த மன்னன் யானையின் மீது இருந்து கீழே குதித்ததான் . புதரை அகற்றி லிங்கத்தைக் கண்டு பதறினான். பிரயசித்தமாக தன்னையே மாய்த்துக் கொள்ளப் போனான். ஈசன் தோன்றி மன்னனைத் தடுத்தாட்கொண்டார் .


மன்னனுக்கு துணையாக நந்தி தேவரை அனுப்பி, குறும்பர்களை அழிக்க உதவினார் . வெற்றிப்பெற்று வந்த மன்னன் ஈசனுக்கு கோயில் எழுப்பினான் . அவன் வைத்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்கள் இன்றும் கருவறையின் முன் உள்ளது.


குறும்பர்களை விரட்டப் போன நந்தி இன்றும் திரும்பிய கோலத்தில் தான் இருக்கிறார்.


ஈசன் சிரசில் வெட்டுப் பட்ட காயம் உள்ளது. அதனால் லிங்கத்திற்கு நித்திய அபிஷேகம் கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறை தான் அபிஷேகம் . அதுவரை ஈசன் திருமேனிக்கு சந்தனக் காப்பிட்டு வைத்திருக்கிறார்கள் .


அசுவினி முதலான 27 நட்சத்திரங்களும் தங்கள் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய தலம்.  அம்பாள் கொடியிடைநாயகி முன் நின்றால் மனதில் ஆனந்தம் பெங்குகிறது. அமைதி தவழ்கிறது என்பது பக்தர்கள் அனுபவம்.  ராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.


சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் “அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன. அற்புதமான நெஞ்சுருக்கும் பதிகம்.


பௌர்ணமி நாளில் மூன்று தல அம்பாளையும் தரிசனம செய்தால் வேண்டும் வரங்கள் யாவும் நிறைவேறும் என்பது ஐதிகம் .


வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும் மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகின்றது.


இன்றும் பலர் இவ்வழக்கத்தைக் கைக்கொண்டு தரிசித்து வருகின்றனர்.


அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்பவளான பராசக்திதான் பலவித காரணங்களுக்காக பல்வேறு வடிவங்களோடு பல்வேறு தலங்களில் அருள்கிறாள்.


பராசக்தியிலிருந்து ஆதிசக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்திகளும் தோன்றி உலகைப் படைத்து, இயக்கி இறுதியில் வீடு பேறு அருள்வதாக தேவிபாகவதம் கூறுகிறது. 


பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் திரிபுரசுந்தரியைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் லதாமத்யம்பா எனும் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கிறது என பக்தர்கள் கூறுகின்றனர்.


இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதிபரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, ‘எனக்கொன்றும் வேண்டாம். வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு நல்லன தந்தருள வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாராம்.


அதன்படி இத்தலம் வருவோரின் குறைகளை சடுதியில் களைந்தருள்கிறார் இத்தல ஈசன். அன்னை திருவுடையம்மனோ, தன் பக்தர்களுக்கு  மழலை வரம், திருமண வரம் தருவதில் கருணையை மழையாய் பொழிந்தருள்கிறாள்.      


நாமும் அம்பிகையை வணங்குவோம் பலன் பெறுவோம் .


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்    திருச்சிற்றம்பலம்.


நன்றி. ஓம் நமசிவாய


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்