அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா செய்தது ஒழுங்கீனமானது.


அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், இது ஒழுங்கீனமான செயல் என்று சூரப்பாவுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மாநில நிதி உரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதலாம் என அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.


நிதி ஒதுக்கீடு குறித்தோ, பங்களிப்பு பற்றியோ இன்னும் தமிழக அரசு வாய் திறக்காத நிலையில் மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா. சர்ச்சை வெடித்ததும் பதிலளித்த சூரப்பா, மாநில அரசுக்கு தெரிந்துதான் கடிதம் எழுதினேன் என்றார்.


ஆனால், அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் அளித்த பேட்டியின்போது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ஜனநாயக ரீதியில் மரபு சார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று கண்டித்தார்.


மாநிலத்தின் முதல்வர் யார் என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் வைரலானது.


இந்த நிலையில், இன்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், சூரப்பா செயல் ஒழுங்கீனமானது. அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு ஸ்டேடஸ் சாத்தியம் இல்லை என்பதை அரசு ஏற்கனவே தெரிவித்துவிட்டது.


இந்த நிலையில், கர்நாடகாவிலிருந்து வந்து நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா, தனக்கு மேல் வேந்தர், இணை வேந்தர், அரசு இருக்கிறது என்பதை மதிக்காமல், அதை மீறி மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டு நிதி ஆதாரங்களை பெருக்குவோம் என கூறியுள்ளார்.


இது ஒழுங்கீனமான நடவடிக்கை. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.