கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு விழா

 கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), (அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார்.


மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன்  சிறப்புப் பகிர்வு


இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்... 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர்  நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் மறைந்த கே.ஆர். நாராயணன்.
குறிச்சிதனம் என்ற சிற்றூரில், தொடக்கக் கல்வி  உழவூரில் நடுநிலைக் கல்வியையும் பயின்ற கே.ஆர். நாராயணன், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மிகவும் ஏழைக் கூத்தாட்டுக் குளம் மற்றும் குரவிளங்காடு ஆகிய இடங்களில் மேல்நிலைக் கல்வியை முடித்தார்.


தொடக்கக் கல்வி பயிலும் போது, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக வயல்வெளிகளைக் கடந்து, 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று படித்தார். கோட்டயத்தில் கல்லூரிக் கல்வியையும், கேரள பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.


இதழியல் படிப்பை முடித்திருந்த கே.ஆர். நாராயணன்,  பிரபல ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனினும் வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் அவர் இருந்தார். பத்திரிகையாளராக இருந்தபோது, 1945-ம் ஆண்டில், மகாத்மா காந்தியை பேட்டி கண்டுள்ளார். பின்னர் டாடா குழும கல்வி உதவித் தொகையைப் பெற்று, லண்டன் பொருளாதாரக் கல்விக் கழகத்தில் (London School of Econmics) அரசியல் அறிவியலில் மேல் படிப்பை  முடித்தார்.


ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்த கே.ஆர். நாராயணன், ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றி, நேருவின் பாராட்டைப் பெற்றவர். ஐ.எஃப்.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.
கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும்  என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கே.ஆர். நாராயணன். தடைகள் பல தாண்டி, உயர் கல்வியை பயின்ற கே.ஆர். நாராயணன், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டதால், நாட்டின் முதல் குடிமகனாக உயர முடிந்தது.


மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, கடந்த 1984-ம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர்,  ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார்.


ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பரிந்துரையின்பேரில், 1992-ம் ஆண்டு இந்தியாவின் 9-வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பின்னர் சங்கர் தயாள் சர்மாவின் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், 1997-ம் ஆண்டு நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.


குடியரசுத் தலைவராக உயர்ந்த நிலையில் இருந்தாலும், பல்வேறு மரபுகளை மாற்றி, தனது வாழ்நாள்வரை மிகவும் எளிய மனிதராகவே வாழ்ந்த கே.ஆர். நாராயணன், 2005-ம் ஆண்டு நவம்பர் 9, தனது 85-வது வயதில், உடல் நலக்குறைவால், டெல்லியில் காலமானார்.


அவர் மறைந்தாலும் முன்னாள் ஜனாதிபதியாக அவர் நிலைநாட்டி விட்டுச் சென்றுள்ள பல்வேறு சமூக மாற்றங்களும், மரபுகளும் இந்தியாவில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணன் விட்டுச் சென்ற சமூக நீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின்  வெளியிட்ட அறிக்கை:


''இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு 27.10.2020.


இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர்.


அவர் குடியரசுத் தலைவரானபோது "நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும், சமூக நீதியின் புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மறைந்த தலைவர் கருணாநிதி மனமார வாழ்த்தியது, இன்றும்  தன் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டி, திறந்திடவும் செய்தார் தலைவர்.


பிறகு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் மரியாதைக்குரிய கே.ஆர்.நாராயணன்தான் திறந்து வைத்தார்.


மறைந்த குடியரசுத் தலைவருக்கும், மறைந்த தலைவர் கருணாநிதிக்கும் மிக நெருக்கமான, உணர்வுபூர்வமான, ஆழமான நட்புறவு மிளிர்ந்து கொண்டிருந்ததை   அறிவேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கே.ஆர்.நாராயணன் விட்டுச் சென்ற சமூக நீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம். அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்''.


இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.