அரசு மருத்துவமனையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை- காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்


திருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையில் பிறந்த குழந்தையை அரசு மருத்துவர்கள் காப்பாற்றி, 2 மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). இவரது மனைவி புவனேஸ்வரி (25). கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


அவர் கருவுற்று 6 மாதங்களே ஆகியிருந்ததால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 550 கிராம் எடையில் ஆண் குழந்தை பிறந்தது.


எடை மிகக் குறைவாக இருந்ததால், கடந்த 2 மாதங்களாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்புக்குப் பிறகு தாயும், சேயும் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவக் குழுவினரை, டீன் வள்ளி பாராட்டினார்.


இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, ‘‘குழந்தைக்கு, பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மூச்சுத்திணறலை தவிர்க்க வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டது.


நுரையீரலை பலப்படுத்தும் வகையிலும், அதன் வளர்ச்சிக்காகவும் மருந்துகள் வழங்கப்பட்டன. தாய்ப்பால் பருகுவதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. தற்போது குழந்தையின் எடை ஒன்றரை கிலோவாக அதிகரித்து, ஆரோக்கியமாக உள்ளது’’ என்றனர்.