மகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து: தாயை பராமரிக்காததால் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை

 கோவை உடையாம்பாளையம் அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஆர்.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 80).


இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இணையதளம் வழியாக சமீபத்தில் மனு அளித்தார். அதில், ‘‘மகன் பராமரிக்காததால் தான் எழுதிக் கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து தர வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.


இதனை தொடர்ந்து ஆட்சியர் கு.ராசாமணியின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மூதாட்டி ராஜம்மாள், அவரின் மகன்கள் கோபால் (50), கதிர்வேல் (47), பிரேமலதா (57) ஆகியோரிடம் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தினார்.


முடிவில், பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம்-2007-ன் படி ராஜம்மாள் மகன் கதிர்வேலுக்கு எழுதிக் கொடுத்த 5 சென்ட் 430 சதுரஅடி பரப்பளவுள்ள ரூ.27 லட்சம் மதிப்புடைய சொத்தின் தானப் பத்திரத்தை ரத்து செய்து, மீண்டும் ராஜம்மாள் பெயருக்கு மாற்றம் செய்ய கோட்டாட்சியர் சுரேஷ் உத்தரவிட்டார்.


கோவை வடக்கு வருவாய் கோட்டத்தில், இதுவரை 7 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, தானப் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.