கொரோனா சிகிச்சையில் தந்தை - மருத்துவமனையிலேயே மகன் திருமணம்


கொரோனா சிகிச்சையில் தந்தைக்காக மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த 10 மாதங்களாக வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் கொரோனாவின் தீவிரம் குறைந்து இருந்தாலும் பாதிப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  மே மாதமே ஊரடங்கு நீக்கப்பட்டது. இருந்தாலும்  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள 56 வயது முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு மிக மோசமான நிலையில் இருந்ததால் கடந்த ஒரு மாத காலமாக ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் அவரது மகனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. தனது தந்தை தன்னுடைய திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் மிக தாழ்மையாக கேட்டு கொண்டு மகன் அனுமதி பெற்றுள்ளார்.

 

மருத்துவமனை நிர்வாகமும் இவர்களின் பாச போராட்டத்திற்கு தடையாக இல்லாமல் தந்தைய மேல் வளாகத்திலிருந்து பார்க்க மருத்துவமனையின் கீழ் வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

 

தனது ஜன்னலின் வழியாக மகனின் திருமண வைபவத்தை தந்தை கண்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டத்துக்கு தடை இல்லாமல் ஒத்துழைப்பு தந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு தற்பொழுது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.