NEET - ஜீவித்குமாராகவே இருந்தாலும் கூட பணம் இல்லாமல் ஜெயிக்க முடியாது!

 



குக்கிராமத்திலிருந்து வந்துள்ள ஜீவித்குமார் இன்று அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளார். அரசுப் பள்ளி மாணவரான ஜீவித் குமார் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் பெருமையான இடத்தைப் பிடித்துள்ளது அனைவரையும் மகிழ்வித்துள்ளது.


அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளதுதான் ஜீவித் குமாரின் சாதனையாகும். சாதாரண கிராமமான பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்தான் ஜீவித்குமார்.


நீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் நீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்


ஜீவித்குமாரின் வெற்றிக்கு அவர் படித்த சில்வார்பட்டி அரசு பள்ளியும் முக்கியப் பங்காற்றியுள்ளது.


பிளஸ்டூவில் மாணவர் ஜீவித் குமார் பெற்ற மதிப்பெண்கள் 600க்கு 548 ஆகும். மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர் ஜீவித்குமார்.


ஆனால் ஜீவித்குமாரின் வெற்றிக்குப் பின்னால் சில உண்மைகளும் மறைந்தே உள்ளன. அது மட்டும்தான் நமக்கு சின்ன வருத்தத்தைக் கொடுக்கிறது. அரசுப் பள்ளி மாணவரான ஜீவித் குமார் இயல்பியே நன்றாக படிக்கக் கூடியவர். எடுத்த லட்சியத்தை அடைவதில் விடாப்பிடியாக போராடக் கூடியவர். அப்படிப்பட்ட பிள்ளைக்கு நீட் தேர்வு எளிதாக கை கூடவில்லை. நிறைய உதவிகள் தேவைப்பட்டுள்ளன என்பதுதான் இங்கு உற்று நோக்கப்பட வேண்டியது.


நீட் தேர்வுக்காக பத்து மாதம் பயிற்சி பெற்றுள்ளார் ஜீவித்குமார். தங்கக் கூட இட வசதி இல்லாத காரணத்தால் இவரது ஆசிரியர் ஒருவர் இடம் கொடுத்து உதவியுள்ளார். அங்குதான் முதல் 2 மாதங்கள் தங்கி நீட் தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார் ஜீவித்குமார். மேலும் சாப்பாடு வசதியும் கூட அந்த ஆசிரியரேதான் பார்த்துக் கொடுத்துள்ளார். இப்படி சிரமப்பட்டுத்தான் ஜீவித்குமாரின் பயிற்சி போயுள்ளது.


நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்துதான் ஜீவித் குமார் பயிற்சி எடுத்துள்ளார்.அந்த மையத்திற்குத் தேவையான கட்டணத்தை வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். இப்படி தனியார் உதவியுடன்தான் இந்த நீட் தேர்வை எதிர்கொண்டு வென்றுள்ளார் ஜீவித் குமார்.


ஆனால் இப்படி நிதியுதவி கிடைக்காமல் தனியார் மைய பயிற்சிகள் கை கூடாமல் போன பிள்ளைகளும் நிறையவே இருக்கிறார்கள்.. அனிதா கூட அப்படித்தானே தடுமாறினார். இதுதான் யோசிக்க வைக்கிறது. எல்லோருக்கும் தனியார் மைய பயிற்சி சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.


இப்படி கஷ்டப்பட்டுத்தான் இந்த நீட்டை வெல்ல முடியும் என்றால் ஏன் அப்படி கஷ்டப்பட்டு ஒரு தேர்வை வெல்ல வைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நீட் தேர்வு இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் ஜீவித்குமார் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்திருக்கத் தேவையிருந்திருக்காது.. எளிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் அழகாக சேர்ந்திருக்க முடியும். தேவையில்லாத பண விரயம் தவிர்க்கப்பட்டிருக்கும்.. மன உளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும்.. சபரிமாலா போன்ற அருமையான ஆசிரியர்கள் தொடர்ந்து பணியில் இருந்திருப்பார்கள்.. நிறைய பிள்ளைகளை உருவாக்கியிருப்பார்கள்.


இதுதான் நம்மை யோசிக்க வைக்கிறது. அனைத்துப் பிரிவினருக்கும் உகந்த, சாத்தியமாகக் கூடிய வகையில் எந்தத் தேர்வும், படிப்பும் இருக்க வேண்டுமே தவிர பணம் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற தப்பான எண்ணத்தை சிறு வயதிலேயே யாருக்கும் அது ஊட்டி விடக் கூடாது.


ஆனால் நீட் தேர்வு மறைமுகமாக அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மையாகும்.