கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவசர அனுமதி அளிக்க முடியாது


 


கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்த அவசர அனுமதி அளிக்கப்பட மாட்டாது,"" என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.


மத்திய சுகாதார அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான ஹர்ஷ்வர்தன், ஞாயிற்றுக்கிழமைகளில், சமூக வலை தளம் மூல மாக, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.


இந்நிலையில், அவர் நேற்று கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ்க்கு எதிராக, உள்நாட்டில் மூன்று விதமான தடுப்பூசிகளுக்கான பரிசோதனை, பல்வேறு கட்டங்களில் உள்ளன.


இவற்றை பயன்படுத்த அவசர அனுமதி அளிக்கும் திட்டம் ஏதும் இல்லை. அந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் புள்ளி விபரங்கள் அடிப்படையின் தான், உரிய முறையில், முறையான அனுமதி அளிக்கப்படும்.


இது மக்களின் உடல்நலன் பாதுகாப்பு தொடர்பானது என்பதால், இந்த விஷயத்தில் அவசரப்பட மாட்டோம். தடுப்பூசி கிடைத்தாலும், துவக்கத்தில் மிகக் குறைந்த அளவே கிடைக்கும்.


அதனால், முதல் கட்டத்தில் எந்தெந்த பிரிவினருக்கு தடுப்பூசி அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பு ஏற்படுவோர், அதிக அளவில் உயிர்பலி ஏற்படும் வயது பிரிவினர் குறித்த தகவல்களை சேகரித்துள்ளோம்.


அதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்.கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை செய்வதற்கு, புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ள, "பெலுடா" பரிசோதனை கருவி, பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து தற்போது வெற்றிகரமாக அமைந்து உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.