நாயன்மார்கள் 63 பேர் சண்டேசுவர நாயனார்

சண்டேசுவர நாயனார் பகுதி - 1



“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.


சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.


நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.


திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ
நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது.


பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றிருந்தது இத்திருத்தலம் !


முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கியப் முருகப்பெருமான் அமரர்களும், பூதகணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகும். திருநகரம் ஒன்றை நிர்மாணித்தார். அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடும் செய்தார். இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞ்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இப்படிப்பட்ட இந்த நகரில் அந்தணர்கள் மிகுந்து இருந்தார்கள்.


அந்தணருள் ஒருவர்தான் எச்சத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர்
பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் விசாரசருமன். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த விசாரசர்மன், ஐந்து வயதுபிராயத்தை அடைந்தார்.


முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த நல்லுணர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் வேதாகமங்களின் உட்பொருள்களில் மிகுந்த  ஈடுபாடு இவருக்கு உண்டானது. அரும்பில் நிறைந்துள்ள மணம், மலரும் தருணம் வெளிப்படுவது போல், கல்வி பயில ஆரம்பித்தபோதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. அவர்சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது.


முக்கண்ணனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால்
இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் அந்தஅந்தணர் குலக்கொழுந்து!


விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்பின. பெற்றோர்கள். அப்பருவத்தில்
அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தனர். குல ஒழுக்கப்படி வேதம்
ஓதுவித்தனர். அவரோ ஆசான் வியக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்று விளங்கினார்.


ஒரு நாள் விசாரசர்மன் வேதம் ஓதும் அந்தணச் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே ஓர் சிறுவன் பசுக்களைஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக்கொம்பினால் முட்டியது.


சிறுவனுக்குக் கோபம் வந்தது. பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரகுமார் திடுக்கிட்டார். அவர் மனம் இளகியது. அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்றார். அவன் பசுவை மேலும் அடிக்காதவாறு தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றிக் கூறலானார்.


ஐயையோ ! எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ?
உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையனவல்லவா ? அரனார் பொன்மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமையும் ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ?


எம்பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருள் இடபத்தின் திருக்குலத்தைச்
சேர்ந்த காமதேனு என்று ஆவினத்தை அழைப்பார்களே ! பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே !


பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், தேவதேவாதியர்களும், முனிவர்களும்
வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத்தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பதல்லவா நம் கடமை, ஆவினங்களைக் காப்பது, ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு அச்சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான்.
அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.


தொடரும்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"


"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்