பஞ்ச சபைத் ஸ்தலங்களும்- பஞ்சாட்சர வடிவமும் மதுரை – வெள்ளிசபை-பகுதி3

பஞ்ச சபைத் ஸ்தலங்களும்- பஞ்சாட்சர வடிவமும் மதுரை – வெள்ளிசபை – ய


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.


இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது.


இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.


இவற்றுள் இராஜ கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.


இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.


மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.


அஷ்டசக்தி மண்டபம்


மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.


கம்பத்தடி மண்டபம்


கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும். கம்பத்தடி மண்டபம், நாயக்க மன்னர் முதலாம் கிருஷ்ணப்பர் காலத்தில் (கி.பி.1564–1572) கட்டப்பட்டு, பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி செய்யப்பட்டது (1877). சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விஜயநகர காலப் பணியாகும்.


அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.


ஆயிரங்கால் மண்டபம்


மீனாட்சியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபத் தூண்களின் ஒரு தொகுதி
நடராஜர் சிற்பம்
நடராஜர் - சிவகாமி சன்னதி
விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி பஞ்சலோக சிற்பம்


ஆயிரம் கல் தூண்கள் உடைய மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்தள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருஷ்ண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.


தெருக்களுக்கு, தமிழ் மாதப் பெயர்கள்


மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் கற்பனை செய்து கொண்டால், அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்கள் ஆகக் கூறலாம்.


மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும், சுற்று வீதிகளுக்கு ஆடி வீதிகள் என்று பெயர். கோயிலுக்கு வெளியில், முதல் சுற்று, சித்திரை வீதிகள்; சித்திரை வீதிகளுக்கு அடுத்த வெளி சுற்று, ஆவணி வீதிகள்; அதற்கு அடுத்த வெளி சுற்று, மாசி வீதிகள்; அதற்கு அடுத்து இறுதி சுற்று, வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக, கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி, தெற்கு ஆடி வீதி).


இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில், குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள், அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில் தான் நடைபெறும்


சிறப்பு விழாக்கள்


மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் மாணிக்கவாசகர் தம் திருவாசகத்துள் புகழந்தோதியுள்ளார்.


குமரகுருபரர் இத்தலத்துப் பெருமாட்டி மீனாட்சியம்மை மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்