பஞ்ச சபைத் ஸ்தலங்களும்- பஞ்சாட்சர வடிவமும் மதுரை – வெள்ளிசபை-பகுதி 2

பஞ்ச சபைத் ஸ்தலங்களும்- பஞ்சாட்சர வடிவமும் மதுரை – வெள்ளிசபை – ய


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.


இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.


சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4வது தலமாக திருவாலவாய் உள்ளது.


இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.


அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை, 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைக்கின்றனர்.


இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.


இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயமாகவும், 192வது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.


தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.


தல வரலாறு

மதுரை மாநகரத்திற்கு அடையாளமாகவும், அழகு சேர்ப்பதாகவும் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்.


விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தைப் பூசித்து, தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.


முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள்


சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான்.


சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


மூலவர்


இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர்.


இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், 'இந்திர விமானம்' என்று அழைக்கப்படுகிறது.


அம்பாள் சன்னதி


இத்தளத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம், மரகதக் கல்பச்சைக்கல் லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்


இந்தக் கருவறை விமானத்தை, தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர் பெற்றார்.


மீன், தன்னுடைய முட்டைகளை, தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட் கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள்.


மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றள்ளது.பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.


நாளை  மதுரை – வெள்ளிசபை-( ய ) பகுதி 3 தொடரும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்