தமிழ்நாடு நாளை (நவம்பர் 1-ஆம் தேதி) அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் - சீமான்


தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்  எழுதியுள்ளார்.


1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா  மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.


எனவே சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள்  பிரிக்கப்பட்டது.


சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக  அரசு கடந்த  2019 ஆம் ஆண்டு அறிவித்தது.


இந்நிலையில் தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்  எழுதியுள்ளார்.


அவரது கடிதத்தில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர்.


குமரித்தந்தை ஐயா மார்சல் நேசமணி,வடவெல்லை காவலர் ஐயா மா.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் போராட்டம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.


உலகம் முழுக்கப் பரந்து வாழும் ஏறத்தாழ 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் தாய் நிலமாகத் திகழ்ந்துவரும் தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1ஆம் நாளினை வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அறிவித்து தமிழக அரசு சிறப்பிக்க வேண்டும் என்பது உலகமெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையாகும்.


இத்தோடு, தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து,  தமிழர்களின் முன்னோர்களான மூவேந்தர்களின் கொடிகளைப் பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலகங்களிலும், அரசின் துறைசார்ந்த நிறுவனங்களிலும் ஏற்றி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி, அதனைப் பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடிட முன்னேற்பாடுகளைச் செய்திட வேண்டுமெனும் கோரிக்கையைக் கனிவோடு ஏற்று அதனைச் செயலாக்கம் செய்திட முன்வர வேண்டுமெனத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு சீமான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.