சப்த விடங்க தலங்கள் - திருக்குவளை அவனி விடங்கர் கோயில்

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.


திருக்குவளை அவனி விடங்கர்  கோயில் பகுதி 1


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 123வது தலம்.


திருக்கோளிலி எனப்படும் திருக்குவளை திருத்தலம். பிரம்மன் வழிபட்டு அருள்பெற்ற அருமை யான தலம்; ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். வெண்மணல் மூர்த்தமாகக் காட்சிதரும் இவருக்குக் ஸ்ரீகோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர் என்றும் பெயர் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீவண்டார் பூங்குழலி.



இங்குதான், அவனி விடங்கராகக் காட்சி தந்து, உலக மக்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார். இங்கேயுள்ள திருநடனம் - பிரமர நடனம் என்பர். பிரமரம் என்றால் வண்டு.


அதாவது வண்டு பறப்பது போலான நடனமாம் இது! திருவாரூரில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ள திருக் குவளைக்கு டவுன்பஸ் வசதி நிறையவே உண்டு. 


மூலவர், வெண் மணலாலான லிங்கம். மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். எப்போதும் செப்புக்குவளை சார்த்தியே காணப்படுகிறார்.


இந்த தேவஸ்தானம் தியாகராஜஸ்வாமி தேவஸ்தானம் என்று வழங்கப்படுகிறது. பகாசுரனை கொன்ற பாவம் தீர பீமன் இங்கு வழிபட்டான் என்பது வரலாறு.


முன் கோபுரத்தில் பீமன் வழிபட்ட லிங்கம் உள்ளது. ஆலயத்துக்கு அண்மையில் சந்திரநதி கிழக்கு நோக்கிஒடுகிறது. எதிரில் பிரம்ம தீர்த்தமும், தென்புரம் இந்திர தீர்த்தமும், மேற்புரம் அகத்திய தீர்த்தமும், சிவலோக வினாயகர் கோயிலருகில் வினாயக தீர்த்தமும் உள்ளன.


இக்கோயிலுக்கு சடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலிய சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் செய்துள்ளதை, கல்வெட்டுச்சான்று எடுத்துரைக்கின்றது.


சிவபெருமானின் திருமுடி கண்டதாகப் பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன.


எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் இலிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் “பிரம்மபுரீஸ்வரர்” ஆனார்.


நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் “கோளிலி” ஆனது. இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.


“டங்கம்” என்றால் “கல் சிற்பியின் சிற்றுளி” என்று அர்த்தம். “விடங்கம்” என்றால் “சிற்பியின் உளி இல்லாமல்” என்று பொருள். “சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்” தானே உருவான இயற்கை வடிவங்களை “சுயம்பு” அல்லது “விடங்கம்” என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 இலிங்கங்கள் சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன.


ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க, தாங்கள் பூஜை செய்து வரும் “விடங்க லிங்கத்தை” பரிசாக தாருங்கள் என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த இலிங்கத்தை தர மனதில்லை.


தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றை தர நினைக்கிறான்.


ஆனால் முசுகுந்தன் “செங்கழுநீர் பூவின் வாசம் உடைய” உண்மையான சிவலிங்கத்தை, தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார்.


இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற இலிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விடுகிறார்.


ஏழு இலிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன. அவை திருவாரூரில் “வீதி விடங்கர்,” திருநள்ளாறில் “நகர விடங்கர்,” நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்,திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்” ” திருக்குவளையில் “அவனி விடங்கர்,” திருவாய்மூரில் “நீலவிடங்கர்,” வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்,”  என அருள்பாலிக்கிறார்.


இத்தலத்தில் சிவபெருமான் “வண்டு நடனம்” ஆடி தரிசனம் தருகிறார்.


வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இலிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணித் தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது.


எனவே இத்தலம் “திருக்குவளை” ஆனது. சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.


நாளை திருக்குவளையில் அவனி விடங்கர்  பகுதி 2  கோயில்  தொடரும்.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



 



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்