கான்கிரீட் வீடு கட்டப்பட்டதாக மத்திய அரசு வாழ்த்து கடிதம்: கூரை, ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சி

 பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட மோதிலால் தெருவில் விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்ட இணைச் செயலாளரிடம் இருந்து கடிதம் ஒன்று அஞ்சல் வாயிலாக வந்துள்ளது.


அந்தக் கடிதத்தில், “இத்திட்டத்தின் கீழ் புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்துகள். இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் சிறந்த வீடுகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்ட விருதுகள்- 2019 வழங்கப்பட உள்ளது. 


பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, எந்த ஒரு தொகையும் வராமல் வாழ்த்துக் கடிதம் வந்திருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, “இத்திட்டத்தின்கீழ் மன்னார்குடி நகராட்சி சார்பில் எந்த ஒரு பயனாளியையும் தேர்வு செய்து கொடுக்கவில்லை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட பணியாளர்கள்தான் இதற்கு பொறுப்பாவார்கள்” என்றனர்.


இதையடுத்து கடலூர் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் இதேபோன்ற வாழ்த்துக் கடிதம் மத்திய அரசிடமிருந்து முன்கூட்டியே அனுப்பப்பட்டு வருகிறது.


இதனால் தவறான புரிதல் ஏற்படுகிறது. மன்னார்குடிநகராட்சிப் பகுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்றனர்.