முருகனுக்குரிய கிருத்திகை... சஷ்டி...

இன்று முருகனுக்கு உகந்த கிருத்திகை... சஷ்டி... மறக்காமல் இதை செய்யுங்கள்...🌟 12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். இந்த ஆவணி மாதத்தை மாதங்களின் அரசன் என கூறுகின்றனர். காரணம், சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் இந்த ஆவணி மாதத்தில் பல சுபகாரியங்கள் விரும்பி செய்யப்படுகின்றன.


🌟 பல தெய்வங்களுக்கான திருவிழாக்களும் இந்த மாதத்தில்தான் தொடங்குகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆவணி மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான தினம்தான் கிருத்திகை தினம்.


🌟 கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கும்.


🌟 முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.


🌟 வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், சண்முகக்கவசம், முருகனின் மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.


🌟 வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்களில் ஏதாவது ஒரு வகையான மலரை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.


பலன்கள் :


🌟 கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும்-பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.


🌟 மேலும், இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.


🌟 ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.


சஷ்டி விரதம் :


🌟 சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறானது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.


🌟 குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.


பலன்கள் :


🌟 சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகிவிடும்.


🌟 சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளை பெற வாழ்வில் அனைத்து செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும்.


🌟 விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.


கிருத்திகையும், சஷ்டியும் சேர்ந்து வரும் இந்நன்னாளில் முருகனை மனதார வழிபட்டு முருகனின் அருளை பெறுவோம்..


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்