தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை

 அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


தமிழகத்திலுள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம், காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி. சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் மரணம் அடைந்தனர்.

 

கடந்த ஜூன் மாதம் சேப்பா்கம்- திருவல்லிகேணி தொகுதி  திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 
 

மேலும், கடந்த மாதம் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரும் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சையின்போது உயிரிழந்தார்.

 

இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தற்போதைய சூழலில் மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது சிரமமானது என்று அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. 


கொரோனா காரணமாக தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக தலைமை செயலாளர் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.