நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது

 நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தார்.


நீட் தேர்வு பயத்தில் 3 பேர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சாதாரண குடும்ப பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்புவோம்.


நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி A.B.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில்,'சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் . கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.


சூர்யாவின் இக்கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்,' என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். புதிய தலைமுறையில் வெளியான சூர்யாவின் அறிக்கையை பார்த்து இக்கடிதத்தை எழுதுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.