சப்த விடங்க தலங்கள் திருமறைக்காடு - புவனிவிடங்கர்

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.


திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்சபாத நடனம்திருமறைக்காடர் கோயில் சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும்.


இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.


இத்தலம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது.


ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது.


கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.


இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.


நாகை மாவட்டத்தின் கடலோர நகரமாக விளங்குவது வேதாரண்யமாகும். இது திருமறைகளில் திருமறைக்காடு என்று போற்றப்பட்ட பழம்பதியாகும்.


இத்தலத்தின் மையத்தில் யாழைப்பழித்த மென்மொழியாள் உடனாய திருமறைக்காட்டு மணவாளர் (வேதாரண்யேஸ்வரர்) ஆலயம் பெருங்கோயிலாகத் திகழ்கின்றது.


இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் யாழைப்பழித்த மென்மொழியாள்  பெயர் கொண்டுள்ளாள்.


இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள்.


துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி திவ்யத்தும் வாய்ந்த சக்தியுடன் எழுந்தருளியுள்ளாள்.


இந்த ஆலயத்தில் கருவறைக்கு இணையாகக் கிழக்கு நோக்கியவாறு பெரிய மகாமண்டபம் உள்மண்டபம் ஆகியவற்றுடன் கூடியதாகப் மிகப்பெரிய தியாகராஜரின் தனி ஆலயம் உள்ளது. இதில் 'புவனி விடங்கர்' என்ற பெயரில் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார்.


இவருடைய சந்நதியில் 'புவனி விடங்கர்' என்ற மரகதலிங்கம் எழுந்தருளி வைக்கப் பட்டுள்ளது. உயர்வகை ஜாதி மரகதக் கல்லால் அமைந்த இந்த லிங்கம் விலை மதிப்பற்றதாகும்.


இதற்கு காலையிலும் மாலையிலுமாக இரண்டு வேளைகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தேர் பழுதுபட்டிருப்பதால் பெருமான் வீதியில் எழுந்தருள்வதில்லை. மற்றபடி வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்களும் கிரகணபுண்ணியகால அபிஷேகங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன. 


தல புராணம்


இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன.கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.


ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர்.


வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.  


அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.


நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.


சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் சிந்தாமணி எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் ஏற்பட்டதாகும்.


அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட, கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து அம் மணியை மீட்டுத்தர வேண்டினார்.


சித்தி, புத்தி தேவிகளுடன் சிங்க வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார்.


இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது. திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார்.


கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.


இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம்.


இவருடைய சந்நதிக்கு நேர் எதிரில் நின்ற இடபம் உள்ளது. அதற்குப் பின்னணியில் அமைந்த விமானத்தில் இவரைத் தொழுது நிற்பவராக சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளார்.


திருவாரூரில் நடப்பதுபோலவே பெருந்திருவிழாவில் சந்திரசேகருக்குப் பட்டம் கட்டும் 'பட்டோற்சவம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இக்கோயில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றது.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்