புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் கூட்டம்

 புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு, ஆராதனை, அபிஷேகம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.


ஏராளமானோர் கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்த படி காத்திருந்தனர்.பின்னர், கோயிலுக்கு வந்த பக்தர்களை வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், கோயிலுக்குள் பூ, தேக்காய் கொண்டு செல்லவும், 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கவில்லை.

கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருந்தன.


தற்போது பக்தர்கள், கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளதால், அனைவரும் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர். 


இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள், திருமுக்கூடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள், மாமல்லபுரம் தலசயன பெருமாள், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், மதுராந்தகம் அருகே திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஏரிகாத்த கோதண்ட பெருமாள் ஆகிய கோயில்கஙள மட்டுமின்றி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.