63 நாயன்மார் பட்டியல் கூற்றுவ நாயனார்

நமது உண்மை   செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :


“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” 


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.



கூற்றுவ நாயனார்


கூற்றுவர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார்.


அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.


தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.


வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி
வந்த திருத்தலம் திருக்களந்தை! இத்திருத்தலத்தில் களப்பாளர் மரபில்
தோன்றிய கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர். வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார்.


அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்ததால் , களந்தை  நாட்டை, அரனார் அருளோடு பெரும் வெற்றிகளைப் பெற்று அறம் பிறழாது புகழ்பட ஆட்சியும் புரிந்து வந்தார்


சிவனருட் செல்வர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவ்வரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிவரும் பக்தி படைத்தவர். இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள அணி, தேர், புரவி, ஆட்பெரும் படை கொண்டு நாடு பல வென்று தமதுக் கொடி கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரி நிலமானது.


முடியுடைய மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்றார். இவ்வாறு திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.


தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.


சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம்.


மணிமகுடம், ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணிமகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.


இவற்றை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்த கூற்றுவ நாயனார் தில்லைவாழ்அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணியபடியே, ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார்.


தில்லையை வந்தடைந்து தில்லை நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்தார்.


தமக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்று வேண்டினார். மன்னரின் மொழி கேட்டு தில்லைவாழ் அந்தணர்கள்அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடிசூட்ட மறுத்தனர்.


மன்ன! நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம்.


மற்றபடி வேறு மன்னர்களுக்கு இத்திருமுடியைச் சூடுவதற்கில்லை என்று துணிச்சலோடு விடையளித்து மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர்.


அவரால் தங்களுக்கு ஏதாகிலும் தீங்கு வந்துவிடுமோ என்று
தங்களுக்குள் தவறான எண்ணங்கொண்டனர்.


தில்லையின் எல்லை நீத்து சேர மன்னர்பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் ஒப்புவித்து, பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.


இவர்கள் அச்சமின்றி மொழிந்ததைக் கேட்டு கூற்றுவ நாயனார்
செய்வதறியாது திகைத்தார்.


முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? எனத் தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை  ற்புறுத்தியோ,தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.


கூற்றுவநாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக் கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார்.


இறைவனைப் பணிந்து, அருட்புனலே ! ஆடும் ஐயனே! உமது திருவருளால்
மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் மட்டும்அந்த மகுடத்தை எனக்குச் சூட்ட மறுத்துப் போய்விட்டார்களே!


ஐயன் இந்த எளியோனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள்புரிதல் வேண்டும் என்று இறைஞ்சினார்.


தமது இருப்பிடத்தை அடைந்து துயின்றார். அன்றிரவு கண்ணுதற்  பெருமான் மன்னன் கனவிலே எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்து மறைந்தார்.


கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி அவர் களத்திலே பெற்ற வெற்றியைக் காட்டிலும் எல்லையற்று நின்றது. தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்த போதும் தில்லைப் பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணிப் பார்த்துப் பேரானந்தமுற்றார்.


சென்னி மீது கை கூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் நாயனார். எம்பெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம்ஒரு குடைக்கீழ் கொண்டவந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார்.


அறநெறி நிறைந்த கூற்றுவ நாயனார், இறைவன் எழுந்தருளியிருக்கும்
கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரி வாரிக் கொடுத்தார்.


தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தங்கு தடையின்றி தட்டாமல் இனிது நடைபெற ஆவனச் செய்தார். திருத்தலங்கள் தோறும் சென்று சிவ வழிபாடு நடத்தினார்.


இவ்வாறு திருசடை அண்ணலின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டி, பாராண்ட கூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சிதபாதத்தில் கலந்து இன்பமெய்தினார்.


இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.


குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்
கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்
பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்
பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த
மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி
மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்
சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து
திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே

குருபூஜை


கூற்றுவர் நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது.


ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்.


திருச்சிற்றம்பலம்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்