திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு

திருநல்லூர்ப் பெருமணம் ( ஆச்சாள்புரம்)



மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று வழங்குகிறது. ஞான சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலம். இக்காரணம் பற்றி இதற்கு முத்தித் தலம். என்ற பெயருமுள்ளது.


தல வரலாறு:

சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 5 வது தேவாரத்தலம் ஆகும்.


வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.


ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.


வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார்.


பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான்.


சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.


காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர்.


திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இ


சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் "இறைவனின் விளையாட்டு தான் இது', என்று சம்மதித்தார்.


மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார்.


இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர்.


ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார்.



சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது "இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார்.

அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,""நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக''என்று அருள்புரிந்தார்.


இறைவர் திருப்பெயர் :சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர்
இறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, பாலாம்பிகை
தல மரம் : - மாமரம்
தீர்த்தம் : -  பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
வழிபட்டோர் : பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார்,வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர், கங்கா தேவி, காக முனிவர்


(பஞ்சாட்சர தீர்த்தம் எதிரில் உள்ளது.) பிரமன், முருகன், பிருகு- வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி முதலியோர் வழிபட்டதும், காகபுசுண்டரிஷி ஐக்கியமான சிறப்புடையதுமான தலம்.


சம்பந்தர் பாடல் பெற்றது. தருமையாதீனத் திருக்கோயில். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உட்சென்றால் கவசமிட்ட கொடிமரம் நந்தி உள்ளன.


விசாலமான உள் இடம். முன்னால் ஞானசம்பந்தரின் திருமண மண்டபம் உள்ளது. இங்குத்தான் வைகாசி மூலநாளில் சம்பந்தர் கல்யாண உற்சவம் தேவஸ்தான ஆதரவுடன் உபயதாரர்களால் சாதாரணமாக நடைபெறுகிறது.


உற்சவநாளில் காலையில் உபநயனச் சடங்கும், இரவு உற்சவத்தில் திருமணமும் வீதியுலாவும், பின்னிரவில் சிவசோதி தரிசன ஐக்கியமும் நடைபெறுகின்றன. மண்டபத்தில் இடப்பால் அலுவலகம், வலப்பால் வாகன மண்டபம் அடுத்து ஞானசம்பந்தர் திருமணஞ்செய்து கொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன.


வெளிப்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் தனிக் கோயில்களாக உள்ளன.


தனிவாயில், சுற்று மதிலுடன் அம்பாள் சந்நிதி உள்ளது. உட்சுற்றில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்திருமேனிகளுள் திரிபுரசம்ஹாரர், சந்திரசேகரர், வாயிலார், சேக்கிழார், பிட்சாடனர், சம்பந்தருடன் உடன் ஐக்கியமான நீலகண்டயாழ்ப்பாணர் மதங்கசூளாமணி, நீலநக்கர், முருகநாயனார், திருமண்க்கோலத்தில் 'தோத்திர பூர்ணாம்பிகை'யுடன் கூடியுள்ள ஞானசம்பந்தர் முதலிய திருமேனிகள் கண்டு களித்துத் தொழத்தக்கன. அடுத்து நால்வரும் - தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதி - நாயன்மார்கள் பெயர், குருபூசை நாள் நட்சத்திரம் முதலியன எழுதப்பட்டு அழகாகவுள்ளன.


அடுத்து மகாகணபதி, சுப்பிரமணியர், ரணவிமோசனர், மகாலட்சுமி சந்நிதிகளும், நடராசசபையும், பைரவர், சட்டநாதர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி (வேலைப்பாடமைந்தது) , இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது.


வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். அழகான சிவலிங்கத் திருமேனி. கோயில் அழகாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.


ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகையுடன்) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது.


சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவன் 'திருப்பெருமண முடைய மகாதேவர்' என்று குறிக்கப்படுகின்றார்.


நாடொறும் ஆறுகால வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அம்பாள் பேரில் 'வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்' பாடியுள்ளார்.



தேவாரப் பாடல்கள் :-திருஞானசம்பந்தர்

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''


எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார்.

இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



 



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்