நவராத்திரி (2020 )இவ்வருடம் எப்போது

நவராத்திரி 2020 : ஏன் இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது



இவ்வருடம் விரதங்களையும் பண்டிகைகளையும் எப்போது கொண்டாடுவது என ஒரே குழப்பம் தான்.


முதலில் ஆவணி அவிட்டம் பிறகு கோகுலாஷ்டமி இவ்விரண்டும் ஆவணியில் வராமல் ஆடியில் எப்படி வந்தது என்று ஒரு பிரச்சனை.


இப்போது மஹாளய பட்சம் புரட்டாசியில் வராமல் எப்படி ஆவணியிலேயே வந்தது, புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள் வருகின்றனவே.


இரண்டாவது அமாவாசையை மஹாளய அமாவாசையாக வைத்துக் கொண்டால் மஹாளயபட்சம் முழுவதும் புரட்டாசியிலேயே வந்து விடுமே. அதை விட்டுவிட்டு முதலாவது அமாவாசையை ஏன் மஹாளய அமாவாசையாக நிர்ணயிக்கப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும், மகாளய அமாவாசை முடிந்தவுடன் துர்க்கை அம்மனை வழிபடக்கூடிய நவராத்திரி பூஜை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் கழித்து தான் நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. 


அடுத்த கேள்வி, மஹாளயபட்சம் முடிந்தவுடன் நவராத்ரி ஆரம்பிக்க வேண்டுமே? அது ஏன் ஒரு மாதம் தள்ளிப்போறது? அடுத்து கந்தசஷ்டி ஐப்பசியில் வராமல் கார்த்திகையில் ஏன் வருகிறது?


மகாளய அமாவாசைக்கும், மகா சஷ்டிக்கும் இடையே வரக்கூடியது தான் நவராத்திரி எனும் கொலு கொண்டாட்டம்.



ஆனால் இந்தாண்டு புரட்டாசி மாதம் இரண்டு அமாவாசைகள் வருவதால், புரட்டாசி முதல் நாள் செப்டம்பர் 17 (வியாழன்) அன்று மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. 


இரண்டாவது அமாவாசை புரட்டாசி 30ம் தேதி வருகிறது.


இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகள்.


இவை அனைத்திற்கும் ஒரே பதில், புரட்டாசியில் வந்த அதிமாதம் தான்.


அது என்ன அதிமாதம்?


இதற்கு சௌரமானம் சாந்திரமானம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகின்றேன்.


சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் சௌரமான மாதமாகும். ஒவ்வொரு வளர்பிறை பிரதமையில் தொடங்கி அடுத்த அமாவாசை வரை உள்ள காலம் சாந்திரமான மாதமாகும்.


ஒரு வருடத்தில் சௌரமான மாதங்களின் மொத்த நாட்களை விட சாந்திரமான மாதங்களின் மொத்த நாட்கள் சுமார் 11 நாள் குறைவாக இருக்கும்.


இதனால் இரண்டேமுக்கால் வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாதம் அதிகமாக வரும். இதற்கு அதிமாதம் என்று பெயர். ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டால் அந்த மாதத்தை சாந்திரமான அதிமாதமாக கொள்வது வழக்கம்.


இந்த அதிமாதத்தில் விரதங்களோ பண்டிகைகளோ வராது.


மஹாளய பட்சமானது சாந்திரமான பாத்திரபத மாதத்தில் தேய்பிறை (பாத்திரபத பகுள) பிரதமையில் தொடங்கி 16 நாட்கள் இருக்கும்.


இங்கு சௌரமான மாதம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. சாந்திரமான பாத்திரபத பகுள பிரதமை அன்று (02-09-2020) ஏற்படுகிறது.


அதனால் மஹாளயபட்சம் அன்றே தொடங்குகிறது. ஆவணி மாதம் இன்னும் 15 நாட்கள் இருப்பதால் மஹாளய பட்சம் முழுவதும் ஆவணி மாதத்திலேயே வந்து விடுகிறது.


அதனால் புரட்டாசி 1ஆம் தேதி வரும் அமாவாசையானது மஹாளய அமாவாசை ஆகிறது.


புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதால் இது அதிமாதம் ஆகும்.


சாந்திரமான பாத்திரபத மாதம் முடிந்து ஆஸ்வின மாதம் துவங்குவதால், இதனை அதிக ஆஸ்வின மாதம் என்பர்.


பஞ்சாங்கத்தில் பார்த்தீர்களானால், புரட்டாசி 2ஆம் தேதி அதிக ஆஸ்வின சுத்தம் என்றும், புரட்டாசி 16ஆம் தேதி அதிக ஆஸ்வின பகுளம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.


ஆஸ்வின சுத்த பிரதமையில் நவராத்திரி ஆரம்பம் என்றாலும் அதிமாதத்தில் விரதங்களோ பண்டிகைகளோ கொண்டாடப்படுவதில்லை என்பதால் இம்மாதம் நவராத்திரி கிடையாது.


அடுத்து, ஐப்பசி 1ஆம் தேதி வரும் பிரதமை நிஜ ஆஸ்வின சுத்தம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அன்று தான் நவராத்திரி ஆரம்பிக்கும்.


எனவே, இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை ஐப்பசி 9ஆம் தேதியன்று கொண்டாடப்படும்.


முன் எப்போதும் இல்லாமல் இப்போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.


இதற்கு முன் 1917 மற்றும் 2001 ஆகிய வருடங்களில் இதுபோல் ஆவணியில் மஹாளய பக்ஷமும், புரட்டாசி 1ஆம் தேதி மஹாளய அமாவாசையும், ஐப்பசியில் சரஸ்வதி பூஜையும் நடைபெற்றது..


நவராத்திரி கொலு எப்போது?


புரட்டாசி இரண்டாவது அமாவாசை முடிந்த பின்னர் மறுநாள் ஐப்பசி 1 (அக்டோபர் 16) நவராத்திரி கொலு கொண்டாட்டம் தொடங்குகிறது.


நவராத்திரி ஆரம்பம் காலை 7.31 - 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்..


ஓம் நமசிவாய 


தொகுப்பு மோகனா செல்வராஜ்