ஈ. வெ. ராமசாமி ((பிறப்பு செப்டம்பர் 17 1879 இறப்பு: டிசம்பர் 24 1973)

ஈ. வெ. ராமசாமி



பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.


தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்  விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.


தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.


பிறப்பு:


ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.


இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.


ஆரம்ப வாழ்க்கை:


தனது படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை முடித்து கொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின்  வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.


தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்து விட்டது.


1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.


காசிக்கு பயணம்:


காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு  வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார்.


திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறை மறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.


ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:


காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக் கூறினார்.


வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டு கள்ளுக் கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார்.


இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.


1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.


ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார்1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.


வைக்கம் போராட்டம்:


பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.


1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.


இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.


அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது.


இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.


சுயமரியாதை இயக்கம்:


1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது. தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடை பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார்.


தென்னிந்தியாவில் பழம் பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது.


கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது.


பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது.


சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும், மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.



 


நாளை தொடரும்


தொகுப்பு:  MOHANA SELVARAJ