108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் தனி செயலி


புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் துணை கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட உள்ளது. அதில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ள 19 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வழங்கினார்.


அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தற்போது 1505 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 108 சேவை மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.


கொரோனா தடுப்பு பணியில் மிகச்சிறப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக துணை கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும்போதே கூடுதலாக ஒரு புதிய செயலி சேவையையும் முதல்வர் தொடங்கி வைப்பார்.


இந்த செயலி மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போதும், கார், ஆட்டோ பயணத்துக்கு பதிவு செய்யும்போதும் வாகனங்களின் வருகையை செயலியில் பார்ப்பதைப் போல, 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதையும் பார்க்கும் வகையில் இந்த செயலி இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.