முரசொலி மாறன் கண்ணோட்டம்

முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003)முரசொலி மாறன்  தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.


முரசொலி மாறன் திருவாரூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில்) உள்ள திருக்குவளையில் 17 ஆகத்து 1934 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் - சண்முகசுந்தரி இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார்.


 இவர் தந்தை சண்முகசுந்தரம் திருவாரூரில் குடி கொண்டு இருக்கும் இறைவன் சிவபெருமாளின் திருப்பெயரான தியாகராஜ பெருமாளின் மேல் உள்ள பக்தியால் தியாகராஜ என்ற பெயருடன் தனது பெயரில் உள்ள சுந்தரம் என்பதை சேர்த்து மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று அவர் தந்தை பெயரிட்டார்.


மேலும் இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக தலைவரான மு. கருணா நிதியின் இரண்டாவது அக்கா ஆவார்.


 மேலும் இவர் தாய்மாமாவான கருணாநிதி அவர்கள் தனது ஆரம்பகால அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக கையெழுத்து பத்திரிக்கையை நடத்தி வந்த போது அவரது அச்சகத்தில் உள்ள அனைத்து விதமான புத்தகங்களையும் குறிப்பாக அரசியல் சார்ந்த புத்தகங்களை மிகவும் கவனத்துடன் படித்து தனது மாமாவான கருணாநிதியிடமே பல சுவையான ஆலோசனை விவாதங்கள் செய்துள்ளார்.


அன்றைய அண்டை நாடுகளில் அரசியல் சம்பந்தபட்ட நூல்களை படித்து மாநில சுயாட்சி என்ற தனது அரசியல் அனுபவம் வாய்ந்த புத்தகத்தை படைத்துள்ளார்.


பின்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலி என்ற தனது சொந்த பத்திரிக்கை நடத்தி வந்த போது அதில் மேலாளாராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்த போது தனது பெயரை மாறன் என்று புனைபெயராக மாற்றி வைத்து கொண்டார். மேலும் அதே காலத்தில் திரைப்படங்களிலும் கதை-வசனகர்த்தாவாக பணியாற்றும் போது தனது பெயரை மாறன் என்று பதிவு செய்ய ஏற்கனவே திரையுலகில் மாறன் என்ற பெயரில் இரண்டு பேர் கதை-வசனகர்த்தாவாக இருந்ததால் முதல் திரைப்படமான குலதெய்வம்  படத்தின் தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் இவருக்கு மாறன் என்ற பெயருடன் சேர்த்து அவர் மாமா கருணாநிதி நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயரான முரசொலி என்பதை அடையாளமாக சேர்த்து முரசொலி மாறன் என்று பெயர் வைத்தார்.


திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் என்றதும் 2 விஷயங்கள் பொதுவாக சட்டென நினைவுக்கு வந்துவிடும்.. ஒன்று கலைஞர் கருணாநிதியின் மனசாட்சி. இன்று வளரும் நாடுகளின் குரலாக தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் எழுப்பிய சங்கநாதம்..


முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.


மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.


பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.


முரசொலி மாறன்-1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்து பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.


கருணாநிதியின் தொடக்க காலம் முதல் அவரது நிழலாகவே இயங்கிவர் முரசொலி மாறன். அண்ணா தமிழக முதல்வரான போது தமது தென்சென்னை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து அந்த இடைத்தேர்தலில் முரசொலி மாறனை திமுகவின் வேட்பாளராக்கினார்.


திமுகவின் டெல்லி முகம்


1967, 1971 தேர்தல்களில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் வென்ற முரசொலி மாறன் 1977 லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அப்போது ராஜ்யசபா எம்.பி.யானார் முரசொலி மாறன். 1967 முதல் 2002-ம் ஆண்டு வரை டெல்லியில் திமுக முகமாக இடைவிடாமல் கோலோச்சியவர் முரசொலி மாறன்.


மத்திய அமைச்சர் மாறன்


இந்த காலகட்டத்தில் பிரதமர்களாக விபிசிங், வாஜ்பாய் பதவி வகித்த போது அவர்களது ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார் முரசொலி மாறன். அப்போது அதாவது 2001-ம் ஆண்டு தோஹாவின் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றன. இம்மாநாட்டில் வல்லாதிக்க சக்திகள், வளரும் நாடுகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்க காத்திருந்தன.


தோஹா மாநாடு


2001-ம் ஆண்டு தோஹா மாநாடு நடந்தது. அம்மாநாட்டில், தமது நாட்டு விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்கி வரும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும், விவசாய மானியம் தொடர்பான விதிகளை, ஏழை நாடுகள் உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தின.மேலும் விவசாயம் சாராத பொருட்களுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தில் காணப்படும் அதிகமான சுங்க வரி, காப்புத் தடைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.


ஆனால் இந்தியா உள்ளிட்ட 130 வளரும் நாடுகளை பாதிக்கக் கூடிய அந்த வல்லாதிக்க நாடுகளின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என உறுதியாக நின்று போர்க்குரல் எழுப்பினார் முரசொலி மாறன்.


அமெரிக்காவும் அதன் சகாக்கள் தேசமும் அதிர்ந்து போயின. முரசொலி மாறனை சமாதானப்படுத்தினால் 130 உலக நாடுகளையும் சமாதானப்படுத்தியதற்கு சமம் என்கிற நிலை உருவானது.


வேறுவழியே இல்லாமல் வளரும் நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையிலேயே தோஹா மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் வர்த்த குரலாக முரசொலிமாறன் இன்றளவும் பேசப்பட்டு வருகிறார்.கருணாநிதியின் நிழல்- மனசாட்சி


அரசியலைப் பொறுத்தவரையில் திமுக தலைவர் கருணாநிதியின் கருவிழி- மனசாட்சி- நிழல் என அத்தனையும் மாறனுக்குத்தான் பொருந்தும்.


அப்படி கருணாநிதியின் மறு உருவமாகவே திகழ்ந்தவர் போற்றுதலுக்குரிய பெருந்தகையாளர் முரசொலி மாறன்.


மிகச் சிறந்த திராவிடர் இயக்க சிந்தனையாளரான முரசொலி மாறன், முரசொலியின் ஆசிரியராக ரைசிங் சன், குங்குமம், முத்தாரம் இதழ்கள் உருவாக காரணமாக இருந்தார்.


கருணாநிதி, மாறன்


சன்டிவி மூலம்தான் கலாநிதி மாறன் ஊடகத்துறைக்கு வந்தவர் என இன்றைய தலைமுறை நினைத்து கொண்டிருக்கிறது.


கலாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறனும், அவரது தாத்தா கருணாநிதியும் ஊடக உலகின் ஜாம்பவான்கள்.


திரைத்துறையின் முன்னோடிகளாக கொடிகட்டிப் பறந்தவர்கள் என்பதை இன்றைய வாட்ஸ் அப் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை.


திரைத்துறை


குலதெய்வம், அன்னையின் ஆணை, அன்பு எங்கே, தலை கொடுத்தான் தம்பி, சகோதரி, நல்ல தீர்ப்பு... இவை எல்லாம் முரசொலி மாறன் திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்.


பிள்ளையோ பிள்ளை, மறக்க முடியுமா? ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் முரசொலி மாறன். மறக்கத்தான் முடியுமா?, வாலிப விருந்து திரைப்படங்களின் இயக்குநர் முரசொலி மாறன் என்பதை இன்றைய இளந்தலைமுறை அறிந்திருக்காது. 


1975-ல் சங்கீத நாடக அகாடமி, முரசொலி மாறனுக்கு கலைமாமணி விருது வழங்கியது என்பது வரலாற்றின் பக்கத்தில் இடம்பெற்ற ஒன்று.


முரசொலி மாறனாக..


முரசொலி மாறனின் இயற்பெயர் தியாகராஜசுந்தரம். முரசொலிக்காகவும் திரை உலகத்துக்காகவும் மாறன் என்ற புனைபெயர் சூட்டிக் கொண்டார். திரை உலகத்துக்குள் நுழையும் போது முரசொலி மாறனாக உருமாறினார்.


அதுவே அவரது சரித்திர அடையாளமாகவே இருந்து வருகிறது. முரசொலி மாறன் எழுதிய ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? திராவிட இயக்க வரலாறு.. மாநில சுயாட்சி நூல்கள்... ஆகியவை வரலாற்று ஆவணங்கள்.


திராவிடர் பேரினத்தின் எழுச்சிக்கான சாட்சியமாக அங்குலம் அங்குலமாக திராவிடர் இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் அற்புதமாக பதிவு செய்தவர் முரசொலி மாறன்.


திராவிடர் இயக்கமும் திமுகவும் கருணாநிதியும் எப்படியும் சரித்திர ஏடுகளின் பக்கங்கள் கல்வெட்டுகளாக இருக்கின்றனவோ..அந்த கல்வெட்டுகளின் தொடர்ச்சியில் முதலிடத்தில் இருப்பவர் முரசொலி மாறன் என்பது வரலாறு


இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நவம்பர் 23, 2003 ஆம் ஆண்டு தன்னுடைய 69வது வயதில் இறந்தார். இவர் இறப்பதற்கு முன் பல வாரங்களாக கோமாவில் இருந்தார். பிரதம மந்திரி வாஜ்பாய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் சென்னையில் நடந்த இவரது இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டனர்


 


தொகுப்பு மோகனா  செல்வராஜ்