ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு - வெற்றி அரசியல் பிரபலங்கள் வரவேற்பு


தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால், தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.


இந்நிலையில், வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை  என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், மக்களின் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.


முதலமைச்சர் திரு பழனிசாமி இன்றே தமிழக அமைச்சரவையைக் கூட்டி - தீர்ப்பை வரவேற்று அமைச்சரவை தீர்மானமாகவே வெளியிட வேண்டும் - அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இதுகுறித்து கூறுகையில், 'ஸ்டெர்லைட் ஆலை திறக்க கூடாது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.' என்றும் தெரிவித்துள்ளார்.


பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி.  மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.' என பதிவிட்டுள்ளார்.


அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.