கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இ - பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி மாவட்டம் விட்டு மாவட்டம் சொல்ல இ பாஸ் தேவை இல்லை. மேலும், செப்டம்பர் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவை வருகின்ற 1-ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் உடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அந்த வகையில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.