பஞ்சபூதத் தலங்கள் - அக்னி பகுதி1
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.
பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.
இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்பு பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும், முடியையும் கண்டறிபவரே நம்மில் பெரியவரென உரைத்தனர்.
அதன் அடியை காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியை காண இயலாமல் திருமால் திரும்ப, அன்னவடிவமெடுத்து முடியை காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புபிழம்பாக நின்ற சிவனின் முடியை கண்டுவிட்டேன் எனக்கூறும்படி கேட்டார் பிரம்மர்.
தன்னால் அடியை கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையை தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை என பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியை கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ருத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனி பயன்படாயெனவும் உரைத்தார்.
தாழம்பூ தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காக குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார்.
திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாக தோன்றினர். அதன்படியே அடிப்பாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும், மேல்பாகம் சிவனாகவும் மாறி வேதங்கள் புகழும் சிவலிங்கம் தோன்றிய நாளே மகா சிவராத்திரி நாளாகும்.
தன்னை நோக்கி தவமியற்றிய பார்வதியை தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும்.
"திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.
இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார்.
நாளை அண்ணாமலையார் கோயில் - பகுதி 2 தொடரும்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....
திருச்சிற்றம்பலம்
ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்