பெரியார் சிலை- சிலை மீது காவி நிறச் சாயம் - போராட்டம்


கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டத்தை கண்டித்து சிதம்பரத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ, உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) அதிகாலை அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது.


தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.


சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.சிலை மீது காவிச் சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இந்நிலையில் திமுக தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்!


தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.அதனால் அவர் பெரியார்!  சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!' என தெரிவித்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில், 103 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், இரு இடங்களில் உள்ள பெரியார் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.