கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்தத்தைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் செயல்களை சுரேந்திர நடராஜன் என்பவர் வீடியோ பதிவுகளாக "கருப்பர் கூட்டம்" என்ற யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். ஆபாச புராணம், கந்த சஷ்டி-12, என்ற தலைப்புகளில் இவர் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.


இதற்கு நடிகர்கள் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் பிரசன்னா ஆகியோர் சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


நட்ராஜ் சுப்ரமணியம் டுவிட்டரில், ''போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல, சிவனாலேயே முடியாதுடா.. என் ஜபம், கந்தர்ஷஷ்டி கவசம் என்னை காக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ... வெற்றிவேல் வீரவேல்'' என பதிவிட்டுள்ளார். மேலும் இவரை வசைபாடியவர்களுக்கும் செம பதிலடி கொடுத்துள்ளார்.


நடிகர் பிரசன்னா டுவிட்டரில், ''எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன் கேட்பதில்லை எங்கிற வாதமும் பயன்தாராது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும், எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம்'' என பதிவிட்டுள்ளார்.


இது தொடர்பாக முருகன் வெளியிட்ட அறிக்கை:


முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல்கள் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். சுரேந்திர நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.