ஏர் இந்தியா ஊழியர்கள் கண்ணீர்.. 5 வருடம் வரை சம்பளமில்லாமல் விடுமுறை.. என்ன கொடுமை இது..!
இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே அதிகப்படியான கடனில் தத்தளித்து வரும் நிலையில், மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துவிட்டு தனியார்மயமாக்கத் திட்டமிட்ட நிலையில் தான் கொரோனா வந்து மொத்த திட்டத்தையும் வீணாக்கியது.
ஏர் இந்தியா ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லாமல் நீண்ட விடுமுறை கொடுக்கப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் தற்போது குறைந்தது 6 மாதம் முதல் 2 வருடம் வரையில் சம்பளம் இல்லாமல் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இது தேவைப்பட்டால் 5 வருடம் வரையில் நீட்டிக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்ட நிலையில், ஏர் இந்தியா விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் பல ஆயிரம் ஊழியர்களின் சம்பளம் கொடுப்பது தான்.
ஏற்கனவே அதிகளவிலான கடனில் மூழ்கியிருக்கும் காரணத்தால் ஏர் இந்தியா நிர்வாகம் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஏர் இந்தியா தனது செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என Indian Commercial Pilots' Association( ICPA) மற்றும் IPGD அமைப்புகள் ஏர் இந்தியா நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.