மாங்கனி திருவிழா


காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.


கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.


முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்


ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார்.


அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.


மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படிக் கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். "மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே" அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார்.


முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை.



சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார்.


உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.


பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார்.


இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்


இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.


அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார்.


இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.


இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.


சிவபெருமானை போற்றி வணங்கிய 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட புகழ் பெற்றவருமான புனிதவதியார் எனும் ஸ்ரீகாரைக்காலம்மையாரின் திருக்கோவில் அமைந்துள்ளது.


தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.


இக்கோவிலில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.



காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.


காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்


மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி 'மாங்கனி திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. ஓம் நமசிவாய


பக்தியுடன் மோகனா செல்வராஜ்