அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் தரிசனம்


நமது  உண்மை   செய்திகள்   ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்  (சுந்தரர் அவதரித்த தலம்)


விழுப்புரம் மாவட்டத்தில் திருநாவலூர் என்னும் ஊரில் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலம் திருநாமநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.


ஒரு காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகராயிருந்ததது இந்த ஊர் ஆகும். சைவ உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந் நால்வர்: சுந்தரமூர்த்தி நாயனார்,


சுந்தரரின் தந்தை சடைய நாயனார், தாய் இசை ஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் என்பவராவர்


பழங்காலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக புழங்குகறது


திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்


மூலவர் : பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,
அம்மன்/தாயார் : மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி)
தல விருட்சம் : நாவல்மரம்
தீர்த்தம் : கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
புராணப்பெயர் : பஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர் : திருநாவலூர்
மாவட்டம் : விழுப்புரம்


தல வரலாறு :


இறைவனையே தோழனாக நினைத்து பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம்.


ஒருமுறை சுக்கிரபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். 


இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'சஞ்சீவினி" மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர்.


ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் 'சஞ்சீவினி" மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்துபோன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கிவிட்டார்.


சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவகிரகத்தில் ஒரு பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். 


பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.


தலச் சிறப்பு :


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


சுந்தரர் அவதரித்த தலம், சுக்கிரன் வழிபட்ட சிவதலம். இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர். 


அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்).


இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடையநாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம்.


அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.


இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219வது தேவாரத்தலம் ஆகும்.


பிரார்த்தனை :


சுக்கிரதோஷம், திருமணவரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம்.


இங்கு வந்து வணங்கினால் மனதிற்கு நிம்மதியும், வாக்குவன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும்.


நேர்த்திக்கடன் :


வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை பூவினாலும், வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து வெண்மொச்சை நிவேதனம் செய்து, வெண்நெய்யால் தீபம் போட்டு, வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் எண்ணப்படி காரியங்கள் தடங்கலின்றி நிறைவேறப் பெறுவார்கள்.


சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.


உலர்ந்த தூய வஸ்திரம் சாற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாற்றுதல் ஆகியவற்றையும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்