‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்!

மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்!1938ம் ஆண்டு. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார் ஜெய்சங்கர். நன்றாகப் படித்தாலும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.


இவரின் துடிப்பும் நடிப்பும் புதிதாக இருந்தது. இவரைப் பார்த்த ஜோஸப் தளியத்துக்கு, பார்த்ததுமே பிடித்துப் போனது. ‘இரவும் பகலும்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்படி அறிமுகமாகும்போது அவருக்கு வயது 27. 


‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. ‘இரவும் வரும் பகலும் வரும்’ பாடலை ரசிக்காதவர்களே இல்லை. இதில் ஒரு ஜெய்சங்கர்தான். ஆனால் இரண்டுவிதமான கேரக்டர்கள் செய்திருந்தார். அடுத்து வந்த ‘பஞ்சவர்ணக்கிளி’யில் இரண்டு வேடமேற்று அசத்தினார்.


எம்ஜிஆரும் சிவாஜியும்தான் அப்போது ராஜாக்கள். எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ரவிச்சந்திரன் என சிற்றரசர்கள்.


எம்ஜிஆர் மாதிரி அழகெல்லாம் இல்லை. சிவாஜி மாதிரி நடிப்பில் பிரமிக்கவைக்கவில்லை.


எஸ்.எஸ்.ஆர் மாதிரி பக்கம்பக்கமாக தமிழ் வசனங்கள் பேசவில்லை. முத்துராமன் மாதிரியான கனமான வேடங்கள் செய்யவில்லை. ரவிச்சந்திரன் மாதிரி ஸ்டைல் காட்டவில்லை.


ஆனாலும் தன் துறுதுறு, விறுவிறு வேகத்தாலும் முகத்தாலும் தனியிடம் பிடித்தார். 


எம்ஜிஆரை வைத்து படமெடுக்க சம்பளம் அதிகம், படமும் பிரமாண்டச் செலவு, நம்மால் முடியாது என்றிருந்த சின்ன தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ்... ஜெய்சங்கர்தான். எவ்வளவு குறைந்த செலவில் படம் பண்ணுவதற்கு ஒத்துழைக்க முடியுமோ... அப்படியொரு பங்களிப்பைக் கொடுத்தார் ஜெய்சங்கர்.


ஏவிஎம்மின் ‘குழந்தையின் தெய்வமும்’ படம், ஜெய்சங்கர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்தன. ‘வல்லவன் ஒருவன்’, ’இருவல்லவர்கள்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘சிஐடி சங்கர்’ என மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள், இவரை குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் தரும் நாயகனாகவும் உயர்த்தின.


ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார்.


பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.


இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டா


கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இன்னொரு பக்கம் முக்தா பிலிம்ஸ், அடுத்ததாக டி.என்.பாலு படங்கள், பஞ்சு அருணாசலம் கதை வசனம் எழுதிய படங்கள் என்று எல்லோருக்கும் இணக்கமான ஹீரோவாக வலம் வந்த ஜெய்சங்கர், நிஜ ஹீரோவாகவே திகழ்ந்தார். 


பெரிதாக சம்பளம் கேட்கமாட்டார். கேட்கும் குறைவான சம்பளத்தில் பாக்கி வைத்தாலும் அந்த பாக்கியை வசூலிக்க கறார் பண்ணமாட்டார். பந்தா கிடையாது. எல்லோரிடமும் தோழமை குணம். தயாரிப்பாளர்கள் தொடங்கி லைட்மேன்கள் வரை... யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ சொல்லி நட்புக்கைகுலுக்கல் செய்து, நல்லுறவு கொண்டதை இன்றைக்கு வரை பேசிக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.


1978ம் ஆண்டில், இவர் நடித்த படங்கள் 13க்கும் மேலே. அத்தனையும் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்தன. 


எண்பதுகள், கமல், ரஜினி உச்சத்தில் இருந்த காலகட்டம். விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன், முரளி, ராமராஜன் என்றெல்லாம் அடுத்த இடத்தின் நாயகர்களும் பிரமாண்ட வெற்றியைக் கொடுத்தார்கள்.


முரட்டுக்காளை’யில் முதன்முதலாக வில்லனாக நடிக்கத் தொடங்கினாலும் அவரை மக்களும் ரசிகர்களும் ஹீரோவாகத்தான் பார்த்தார்கள். ‘மக்கள் கலைஞர்’ எனும் அடைமொழியுடன் கடைசி வரை வலம் வந்தார். ‘


ஊமை விழிகள்’ படத்தின் பத்திரிகை ஆசிரியர் வேடத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். ‘விதி’ படத்தின் டைகர் தயாநிதி வக்கீலையும் அவரின் ஆர்ப்பாட்ட அலட்டலையும் யாரால்தான் மறக்கமுடியும்?


2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.


இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார்


1938ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்த ஜெய்சங்கருக்கு இன்று பிறந்தநாள்.   அவரைக் கொண்டாடுவோம்!


 


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்