நமது நமது உண்மை செய்திகள் குழுவிலிருந்து அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில் :
திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.
பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
முல்லைவனநாதர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருக்காவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
மூலவர் : முல்லைவனநாதர்
தாயார் : கருகாத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை
தல விருட்சம் : முல்லை
தீர்த்தம் : பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்
புராணப்பெயர் : கருகாவூர், திருக்களாவூர்
ஊர் : திருக்கருகாவூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
தல வரலாறு :
ஒரு காலத்தில் இந்த இடம் முல்லை காடாக இருந்தது. நித்துருவர், வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கி குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர். இதனையடுத்து வேதிகை கருவுற்றாள்.
வேதிகை கருவுற்றிருந்த போது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டார். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிச்சையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது.
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடி)யை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி குழந்தையாக கொடுத்தாள்.
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை மருத்துவம் பார்த்து கருவைக் காத்ததால், கருகாவூர் என்று பெயர் வந்தது.
- தலச்சிறப்பு :
- இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன்|லிங்கமும் உள்ளது.
- மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
- சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
- இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
- இத்தலத்தில் உள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
- கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
- இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.
- கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
- கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
- கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
- இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
- இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
- முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, அம்பாள் திருவடியில் நெய் அபிஷேகம் செய்து அந்நெய்யை உண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
பிரார்த்தனை :
திருமணமாகி பல ஆண்டுகளான தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைப்பதற்கும், கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்கு புகழ்பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது.
மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்கினால் பிரச்சனைகள் நீங்கி பலன் அடைவார்கள்.
இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன் :
பிரதி மாதம் வளர்பிறை பிரதோஷத்தின்போது சுவாமிக்கு புனுகு சட்டம் சாற்றுதல் முக்கிய நேர்த்திகடனாக உள்ளது.
அம்மனுக்கு புடவை சாற்றியும், அபிஷேகம் செய்தும், சந்தனகாப்பு சாற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே..
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்கள் ஐந்து அவை:-
1. கருகாவூர் - முல்லைவனம்,
2. அவளிவணல்லூர் - பாதிரிவனம்,
3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம்,
4. இரும்பூளை - பூளைவனம்,
5. கொள்ளம்புதூர் - வில்வவனம்
இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது.
அமைவிடம்:
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
பக்தியுடன் மோகனா செல்வராஜ்