வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்றுசிகிச்சை -ரஜினி உதவி

வில்லன் நடிகர்  பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கமல்; நடிகர்கள் ஒன்றிணைந்து உதவிபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு நடிகர்களும் உதவிகள் செய்துள்ளனர்.


சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறியவர் பொன்னம்பலம். 'அபூர்வ சகோதரர்கள்', 'மாநகர காவல்', 'வால்டர் வெற்றிவேல்', 'ஆனஸ்ட்ராஜ்', 'நாட்டாமை', 'உள்ளத்தை அள்ளித்தா', 'மாயி', 'சாமி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


சிறுநீரகக் கோளாறு பிரச்சினையால் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிகிச்சைக்கு உதவியது மட்டுமல்லாமல், அவரது குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்றார் கமல்.


இதனிடையே தற்போது வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார் பொன்னம்பலம். அவருடைய உடல்நிலை, உதவியவர்கள் குறித்து பொன்னம்பலம் கூறியிருப்பதாவது:


"எனக்கு 52 வயதாகிறது. வீட்டிலிருக்கும்போது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அறிந்த சரத்குமார் சார் உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்க்க பண உதவி செய்தார். 


இதனை அறிந்த விஷால் - கார்த்தி இருவரும் அடையாற்றில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் போதுதான் கமல் சார் பேசினார்.


"இப்போதைய காலகட்டத்தில் இதெல்லாம் சரி செய்துவிடலாம். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உனது குழந்தைகளின் கல்விச் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வேறு என்ன உதவி வேண்டுமானாலும் அழைக்கவும்" என்று நம்பிக்கையூட்டினார்.


பின்பு எனது நிலையை அறிந்து ரஜினி சார் பேசினார். "எதற்கும் கவலைப்பட வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பேசுகிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். அடுத்த நாள் ரஜினி சாருடைய மனைவி பேசி, "கவலை வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பேசியிருக்கிறோம். ரஜினி சார் சொல்லச் சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், வீட்டுச் செலவுக்கும் பண உதவி செய்தார்.


விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். எனக்கு உதவிய, நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய அனைத்து நடிகர்களுக்கும் நன்றி".


இவ்வாறு பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.