குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை
2011ம் ஆண்டு குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், 2013ம் ஆண்டு குட்கா உற்பத்தி, விற்பனைக்கு உச்சநீதிமன்றமும் தடை விதித்தது.
2013ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, குட்கா உற்பத்தி, விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது.
தடை விதித்தபோதும் தமிழகத்தில் குட்கா, பான் விற்பனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. 2014ம் ஆண்டு குட்கா விற்பனை குறித்து சிபிஐயில் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததால், அது தொடர்பாக விசாரிக்க தனிக்குழுவை சிபிஐ நியமித்தது.
2015ம் ஆண்டு குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் குட்கா விவகாரம் குறித்த சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.
2016ம் ஆண்டு மாதவரத்தில் உள்ள குட்கா நிறுவனம் மீது 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததால், தமிழகத்தின் பல இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
குட்காவை தடையின்றி விற்பதற்கு பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்த நிலையில் தமிழக அரசு குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.
சுகாதார அதிகாரிகளை விசாரிக்க அனுமதி தேவை என சிபிஐ 2018-ம் ஆண்டு கோரிக்கை முன்வைத்தது.
செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய இருவரை விசாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.