தமிழ்நாடுகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்
தஞ்சாவூர், நாஞ்சிக் கோட்டை வடக்கு தெருவில் வசித்த சமீபத்தில் காலஞ்சென்ற திருமதி.தனபாக்கியம் ஆசிரியர் அவர்களின் இளைய மகன் சென்னை பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மரு.S.M.சந்திரமோகன்,M.S. அவர்கள்
சென்னையின் முன்னணி குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணரும், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் (வயது 63), , மாரடைப்பால் காலமானார்.
தஞ்சாவூரில் பிறந்த சந்திரமோகன், 1979ம் ஆண்டில், தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்தார் பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை எம்.எஸ் படிப்பை முடித்தார்.
முதுகலை படிப்பில் சிறந்து விளங்கிய சந்திரமோகன் முதல் மாணவனாய் தேறி, தங்கப்பதக்கம் வென்றார்.
பின் அவர் அதே சென்னை மருத்துவ கல்லூரியிலேயே, Superspeciality in Surgical Gastroenterology படிப்பையும் முடித்தார். இதன்மூலம், MCh Surgical Gastroenterology படிப்பை நிறைவுசெய்த இந்தியாவின் 7வது நபர் என்ற பெருமையை டாக்டர் சந்திரமோகன் பெற்றார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சர்ஜிகல் கேஸ்ட்ரோஎன்டிரோனாலஜி துறையை துவக்கினார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியிலும், பேராசிரியராக பணியாற்றிவந்தார். பின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சர்ஜிகல் கேஸ்ட்ரோஎன்டிரோனாலஜி துறையின் தலைவராக உயர்ந்தார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநராக இருந்து 2015 ஓய்வுபெற்றவர்
மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன். மருத்துவ சேவையுடன் சேர்த்து‘நலமான வாழ்வுக்கு மக்களின் பங்கு’,‘நோயை வெல்லும் உணவு’, ‘புற்றுநோய் வெல்ல முடியாதது அல்ல’போன்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகளைவழங்கி வந்தார். ஓய்வுக்கு பிறகு ‘ஈசோ இந்தியா’ என்ற அமைப்பைதொடங்கி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு ஏற்படும் உணவுக்குழாய் பாதிப்புக்கு நவீன சிகிச்சை அளிக்கும் முறையில் நிபுணத்துவம் பெற்றவர்.
ஏழைகளுக்கும் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்து வந்தார். இவரது சிகிச்சை முறை சர்வதேச அளவில் பல மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
டாக்டர் சந்திரமோகனின் மனைவி ரேமாவும் மருத்துவர் ஆவார். இவர் குழந்தைகள் நல மையத்தின் இயக்குனராக உள்ளார்.
இவரது 2 மகள்களும் மருத்துவச்சேவையிலேயே உள்ளனர்.
ஸ்டாலின் இரங்கல்:
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது.
நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தியவர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.