பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு


புதுச்சேரி புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீருமான மன்னர் மன்னன் முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் 06.07.2020 உயிரிழந்தார்.


கோபதி என்ற இயற்பெயரைக் கொண்ட மன்னர் மன்னன் தந்தை வழியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர். தந்தையின் முகச்சாயலை அச்சு அசலாகப் பெற்றிருந்த மன்னர் மன்னன், தனது மீசையையும் தந்தையைப் போலவே வடிவமைத்துக்கொண்டவர்.


பாரதிதாசன் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இவரை நேரில் சந்திக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாவார்கள். பாரதிதாசன் மறைந்து 56 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், அவரை தனது தோற்றத்தின் மூலம் புதுச்சேரியின் வீதிகளில் நடமாடச் செய்தவர் மன்னர் மன்னன்.


பாரதிதாசனின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழாக்களில் அவரது திருவுருவப் படத்துக்கு பதில் தனது புகைப்படத்தை வைத்தச் சம்பவங்களை சிலேடையாகக் கூறுவார்.


`எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’ என்ற எழுச்சிமிகு வரிகள் மூலம் தமிழ் தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன்.


92 வயதான அவருக்கு முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த சில வருடங்களாக அவதியுற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.


தன் தந்தையின் வரலாற்றை `கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட மரபுக் கவிதை மற்றும் தொகுப்பு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.


புதுச்சேரி வானொலியின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்து தொடர்ந்து இரண்டு முறை அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதிருக்கும் தமிழ்ச் சங்கக் கட்டடம் இவரது பதவிக்காலத்தில் கட்டப்பட்டதுதான்.


விடுதலைப் போராட்டத் தியாகியான இவர், மொழிப்போர் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத் தண்டனையைப் பெற்றவர்.


தந்தையைப் போல திராவிட இயக்கச் சிந்தனையாளரான இவர், தந்தைப் பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.


இவரது ’பாட்டுப் பறவைகள்’ என்ற நூல் பாரதியின் பத்தாண்டுகால புதுச்சேரி வாழ்வையும், அப்போது பாரதிதாசனுடன் அமைந்த தொடர்பையும் விரிவாகப் பேசக்கூடியது. இவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து `தமிழுக்குத் தக்க துணையான பக்க பலம் போய்விட்டதே’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். 


புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளன. இந்திய விடுதலை மற்றும் மொழிப்போர் போராட்டத்திலும் மன்னர் மன்னன் பங்கேற்ற தியாகியாவார். மேலும் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர் மன்னர் மன்னன் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.