பஞ்சாரண்ய ஷேத்திரங்கள் (5)
வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்)
முல்லை வனம் (திருக்கருகாவூர்), பாதரிவனம் (அவளிவநல்லூர்), வன்னிவனம் (அரித்துவாரமங்கலம்), பூளைவனம் (ஆலங்குடி), வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய ஐந்தும் பஞ்சாரண்ய ஷேத்திரங்கள்.
இந்த ஐந்து வனத் தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம் என்பர்.
திருக்கொள்ளம்புதூர்:
பஞ்ச ஆரண்யத் தலங்களில் நிறைவானது ‘திருக்கொள்ளம்புதூர்’ திருத்தலம். இங்கே சிவபெருமான் ‘வில்வாரண்யேஸ்வரர்’ என்னும் பெயரில் காட்சியளிக்கிறார். அம்பாளின் திருநாமம் செளந்தரநாயகி. வில்வவனத்தலம் இது.
இங்கு, அர்த்தஜாமப் பூஜை எனப்படும் ராக்கால பூஜையை மாலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை வழிபட்டு தரிசனத்தை நிறைவு செய்ய வேண்டும்.
மூலவர்: வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்
தாயார்: சௌந்தர நாயகி, அழகு நாச்சியார்
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம், வெட்டாறு (முள்ளியாறு) அகத்திய காவேரி
திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113ஆவது சிவத்தலமாகும்.
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. இத்தலம் தொலைவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார் என்பது தொன்நம்பிக்கை.இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.
சுவாமி விபுலானந்தர் இயற்றிய யாழ் நூல் அரங்கேறிய திருத்தலமும் இதுவே.
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர்.
இது முள்ளியாறு என்றும் அகத்திய காவேரி என்றும் அழைக்கப்படும். கோயிலுக்கு மேற்கே இந்த ஆறு ஓடுகிறது.
சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும்போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார்.
இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது.
திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.
இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.
கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.
கோவில் அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன.
துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம். வலதுபுறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது.
இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன.
வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது.
5 நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம்.
உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன.
அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.
அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள்.
துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர். இது ஓடம்போக்கி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
ஓட விழா, ஐப்பசி அமாவாசையில் நடத்தப்பெறுகிறது. இவ்விழா இத்திருகோயிலில் நடைபெறும் சிறப்பான விழாவாகும்.
கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....
திருச்சிற்றம்பலம்
பக்தியுடன் மோகனா செல்வராஜ்