ஸ்டான்லி மருத்துவமனை- பயிற்சி மருத்துவர் தற்கொலை

 சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


பயிற்சி மருத்துவர் கண்ணன் (24) இன்று காலை மருத்துவமனை விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கண்ணன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.


கண்ணனின் விருப்பத்தின் படியே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து ஒரு மாதத்தில் தற்கொலை செய்தது சந்தேகமளிப்பதாக உறவினர் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். 24 வயதுடைய இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் முழுவதும் இவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.


கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதன் காரணமாக ஏராளமானோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.


இன்று அதிகாலை 5:30 மணியளவில் தங்கும் விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றிய போலீசார், இவர் பணி சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ஏதேனும் குடும்ப பிரச்சனையின் காரணமாக இத்தகைய முடிவு எடுத்தாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 


இந்நிலையில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்திருப்பது மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.