கழறிற்றறிவார் நாயனார் ( பகுதி 3)

கழறிற்றறிவார் நாயனார்  ( பகுதி 3)


சேரமான் பெருமான் நாயனார்


நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் 



தில்லையிலே பல நாட்கள் தங்கியிருந்து, அற்புதக் கூத்தாடுகின்ற நாதரின் திருவடியைப் பாடி பரவி ஓர் நாள் திருவாரூருக்குப் புறப்பட்டார் நாயனார். வரும் வழியில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தொழுது புறப்பட்டு திருவாரூரை வந்தடைந்தார்.


அது சமயம் சுந்தரர், திருநாகைக் காரோணத்திற்கு சென்று அரனாரைத் துதித்துப்பாடி பொன்னும் மணியும், பட்டாடைகளும், கஸ்தூரியும், குதிரையும் பெற்றுத் திருவாரூர் அடைந்திருந்தார். சுந்தரர் தம்மைக் காணவரும் சேரன் பெருமாள் நாயனாரை,


அன்புடன் எதிர்கொண்டு அழைத்தார். சேரமான் சுந்தரர் சேவடியைப் பணிந்தெழுந்தார். இருவரும் ஆரத்தழுவி அக மகிழ்ந்தனர். இவ்வாறு அன்பின் பெருக்கால் சேரமான் பெருமாள் நாயனாரும், தம்பிரான் தோழரும் ஒருவரோடு ஒருவர் அன்பு பூண்டு நின்றனர்.


இவர்களது ஒப்பற்ற தோழமையைக் கண்ட திருவாரூர்த் தொண்டர்கள் சேரமான் தோழன் என்னும் திருநாமத்தைச் சுந்தரருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். சுந்தரர் சேரர் பெருமானை அழைத்துக்கொண்டு தியாகேசப் பெருமானின் தாள் போற்றி திருவாரூர்த் திகழும் மணிக்கோவை என்னும் பிரபந்தத்தைப் பாடினார்.


சுந்தரரின் செவிக்கினிய கீதத்தில் சேரமான் சிந்தை மகிழ்ந்தார். பக்தியில் மூழ்கினார். சுந்தரர், மன்னரைத் தமது திருமாளிகைக்கு அழைத்தார். சேரமான் சுந்தரரின் அழைப்பிற்கு இணங்கி சுந்தரர் திருமாளிகைக்குச் சென்றார்.


பரவையார் மன்னவனையும், மணவாளனையும் முகமன் கூறி வரவேற்றாள். மன்னருக்கு மனைவி நல்லாளை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரர். கணவர் பணித்ததற்கு ஏற்ப, மன்னர்க்கு சிறப்புமிக்க விருந்து சமைத்தாள் பரவையார்.


சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஈடு இணையில்லா அன்பிற்கு அடிமையாகி ஆனந்த வெள்ளத்தில் மகிழ்ந்து மூழ்கி இன்பம் கண்டனர். ஒருமித்த மனமுள்ள, இவ்விரு சிவனருட் செல்வர்களும், சில நாட்கள் திருவாரூரிலிருந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு பெருமானின் பேரருளைப் பெற்றுக் களிப்புற்று வந்தனர். இருவரும் பாண்டிய நாடு செல்லக் கருதி ஒருநாள் திருவாரூரிலிருந்து புறப்பட்டனர்.


திருக்கீழ்வேளூர், திருநாகைப்பட்டிணம், திருமறைக்காடு, திருவகத்தியான்பள்ளி, திருப்புத்தூர் முதலிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகம்பாடி பரவசமுற்றவாறு மதுரை மாநகரை வந்தடைந்தனர். பாண்டிய மன்னன், தக்க மரியாதையுடன் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார்.


பாண்டிய நாட்டிற்கு வந்திருந்த பாண்டியன் மகளை மணம் புரியப்போகும் சோழ அரசனும் உடன் சென்று உபசரித்தார். இப்படி மூவேந்தரும் ஒன்றுபட்டனர். சுந்தரமூர்த்தி நாயனாருடன் சொக்கலிங்கப் பெருமானின் கோயிலுக்குச் சென்றனர். 


சேரமான் பெருமாள் நாயனார், பாண்டியனிடமும், சோழனிடமும் விடைபெற்றுக் கொண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் புறப்பட்டார். பல திருத்தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடி உளம் மகிழ்ந்தவாறு இருவரும் சோழ வளநாட்டை வந்தணைந்தனர்.


இருவரும் சோழ நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றை வணங்கியவாறு மீண்டும் திருவாரூரை அடைந்தனர். தியாகேசப் பெருமானை வணங்கி மகிழ்ந்த இருவரும் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினர்.


சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் விருந்தினராகச் சிலகாலம் தங்கியிருந்து நாடோறும் நலம் தந்த தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். சுந்தரரும், சேரரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் இன்புற்று வாழ்ந்து வரும் நாளில், சேரர்கோன் சுந்தரரைத் தம் நாட்டிற்கு வரும்படி வேண்டினார்.


சுந்தரர் அவரது விருப்பத்தை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு, சிவத்தொண்டர்களுடன் திருவாரூர் எல்லையை நீத்தார்.


தொடரும்.


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்