நாகசதுர்த்தி
நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை.
நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர்.
நாக தேவதைகள் துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான்.
தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து, ‘சர்ப்பயக்ஞம்’என்ற வேள்வியை நடத்தினான்.
பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன.
அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது.
முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும்.
நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது.
நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள்.
அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.
அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்…
நாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:
❂ ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.
❂ பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.
❂ கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.
❂ அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.
❂ புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
❂ ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி.
❂ விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.
❂ இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
நாகங்கள் இந்து வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.
சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும்.
எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது.
நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக விமரிசையாக நடக்கும்.
நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது.
இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம்.
குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.
தமிழ் நாட்டில், இவ்வாறு நாகபூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று பெயரிடுகின்றனர்
இத்தகைய சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
நாளை கருட பஞ்சமி
தொடரும்
தொகுப்பு மோகனா செல்வராஜ்