சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும். சதுர் எனும் வடமொழிச் சொல் நான்கு எனப் பொருள்படும்.
15 நாட்களைக் கொண்ட தொகுதியில் நான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் நான்காம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் நான்காம் நாளுமாக இரண்டு முறை சதுர்த்தித் திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தியைச் சுக்கில பட்சச் சதுர்த்தி என்றும், பூரணையை அடுத்த சதுர்த்தியைக் கிருட்ண பட்சச் சதுர்த்தி என்றும் அழைக்கின்றனர்.
இவ்விரதத்தை கிருதவீரியன் மேற்கொண்டு கார்த்தவீரியன் என்ற வீரனைப் பிள்ளையாகப் பெற்று பேரரசை எய்தினான். சந்திரன் இந்நோன்பைப் பூண்டு தனது சயரோகம் நீங்கப்பெற்றான். புருசுண்டி என்னும் முனிவர் கடைபிடித்து தன் பிதுர்தேவதைகளைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினார். இன்றும் கடன்தொல்லை, நோய், பகை உடையவர்கள் இந்த நோன்பைப் பூண்டு அவை நீங்கப் பெற்று இன்பம் எய்தி வருகின்றனர்.
இவ்விரதத்தை முதன் முதலிற் செவ்வாய் கடைபிடித்து பேறுபெற்றான். அதனால் இதனை அங்காரக சதுர்த்தி எனவும் அழைப்பர்.
சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும் கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர்.
இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது.
விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.
அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும்.
இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. சதுர்த்தித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:
- விநாயகர் சதுர்த்தி - ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தித் திதி.
- சங்கடஹர சதுர்த்தித் தொடக்கம் - ஆவணித் தேய்பிறைச் சதுர்த்தித் திதி.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. ஓம் நமசிவாய
பக்தியடன் நாளை மோகனா செல்வராஜ்