ரஷ்யர்களை குஷிப்படுத்தும் பாகுபலி..!


ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி ரஷ்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.


ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. 2 பாகங்களாக வெளியான, இதன் முதல் பாகம் 2015ம் ஆண்டும் 2வது பாகம் 2017 ஆண்டும் வெளியானது. இந்தப் படம் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தை விட அதிக வரவேற்பை பெற்ற பாகுபலி 2 இந்தியத் திரையுலகில் முதன் முதலில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெற்றது. பொதுவாக ஹிந்திப் படங்கள்தான் உலக அளவில் அதிக வசூலைக் குவிப்பது வழக்கம். அதை முறியடித்து, ஒரு தெலுங்குப் படம் அந்த சாதனையைப் புரிந்தது.


பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்போது இன்றளவும் ரசிகர்கள் அதிகளவில் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திரைப்படம்  ரஷ்யாவில் உள்ள தொலைக்காட்சியில் அந்நாட்டு மொழியில் ஒளிப்பரப்பப்பட்டதை ரசிகர்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.