இயற்பகை நாயனார்- 2


அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லித் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும்


இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்.


மறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார்.


வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார்.


அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடமும் தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.


இச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”.


தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக் கூறினர்.


மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப் போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார்.


வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல் கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார்.


அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ!


நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன் மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர்.


நாளை தொடரும்


பக்தியுடன் மோகனா செல்வராஜ்