“எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை
சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது.
அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர்.
மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.
இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழி தெரியாது மாற்றினார்.
அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர்.
கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன.
பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.
தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் தீரவே அருந்ததி அனைய மனைவியார் தண்ணீரை வார்க்க அதனை அன்பாளர் அமுது செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர்.
ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும் பொழுது திருமேனி வாடியதனால் கால் தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்ந்தார்.
மட்கலம் மூடும் கையினால் காதல் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார்.
ஓம் நமசிவாய
நாளை பக்தியுடன் மோகனா செல்வராஜ்