உத்திர கோச மங்கை கோவில்- நிறைவு
- இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌக் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)
- மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.
- அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.
- நாடொறும் ( daily 12 noon) உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.
- நடராசரைத் தொழுது முன் மண்டபம் வந்தால், அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக் காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தரிசிக்கும்போதே வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத் தக்கது.
- உமாமகேசுவரர் சந்நிதிக்குச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.
- நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் - உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.
- இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். தொடர்புக்கு:- +91- 4567 221 213, 94427 57691.
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பக்தியுடன்( மற்று ஒரு கோவில் )நாளை தொடரும்
மோகனா செல்வராஜ்