ஏழு ஜென்ம பாவங்களும் விலக...

 


    🍁🍁🍁🍁🍁🍁

ரத சப்தமி... ஏழு ஜென்ம  பாவங்களும் விலக... சூரிய பகவானை இப்படி வணங்குங்கள்...!!

ரத சப்தமி..!!

28.01.2023

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம். தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினம் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகான 7வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.

அதன்படி இவ்வாண்டு (28.01.2023) சனிக்கிழமை ரத சப்தமி அனுஷ்டிக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளையொட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.

ரத சப்தமி நாளில் என்ன செய்ய வேண்டும்?

இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும்.

ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்குகிறது.

ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணை பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யலாம். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம்.

ரத சப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த நாளில் செய்யப்படும் தான, தர்மங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். இவ்வாண்டு ரத சப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பார்வைக்குத் தெரியும் பகவானான சூரியனை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, "ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!" என்று சொல்லி வணங்கலாம்.

ஸப்தி ப்ரியே தேவி ஸ்பத லோகைக பூஜிதே

ஸ்பத ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸ்பதமி ஸத்வரம்!!

எனும் துதியை ரத சப்தமி அன்று சப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை.

🙏🙏🙏🙏🙏🙏

மோகனா  செல்வராஜ்