தினம் ஒரு திருத்தலம்... சூலத்திற்கு பதில் கதாயுதம்... ஆனந்த பைரவர்...!!

 


    💐தினம் ஒரு திருத்தலம்... சூலத்திற்கு பதில் கதாயுதம்... ஆனந்த பைரவர்...!!

               

🙏அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில்...!!


தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...


🍁இந்த கோயில் எங்கு உள்ளது?


சிவகங்கை மாவட்டம் நகர சூரக்குடி என்னும் ஊரில் அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.


🍁இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?


காரைக்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் நகர சூரக்குடி என்னும் ஊர் உள்ளது. நகர சூரக்குடி பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.


🍁இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?


அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயிலின் மூலவரான தேசிகநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இறைவி ஆவுடைநாயகி ஆவார்.


தட்சிணாமூர்த்தி மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம், பிரம்மாண்டமான வண்ணக் கோபுரம் ஆகியவை சிறந்த வேலைப்பாடுகளை உடையவை எனும் பெருமை கொண்டவை.


காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் உள்ளிட்ட அறுபத்து மூவர் காட்சியளிக்கின்றனர்.


இத்திருக்கோயிலில் பைரவரே பிரதான மூர்த்தி ஆவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.


இத்தலத்தில் சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு காட்டுகிறார்கள்.


🍁வேறென்ன சிறப்பு?


காவல் தெய்வமான முனீஸ்வரர் வட்டமான பீட வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.


தினமும் இக்கோயிலில் காலையில் முதல் பூஜை சூரியனுக்கு செய்யப்பட்டு, அதன் பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.


பைரவர் சன்னதியின் பின்புற பிரகாரத்தில் மற்றொரு பைரவர், கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.


பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள 'ஆனந்த பைரவர்" சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது தனிச்சிறப்பு.


🍁என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?


பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி மாதம் உத்திர விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், அறுபத்து மூவர் குருபூஜை போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

🍁எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?


குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், குழப்பம் நீங்கி மன அமைதி பெறவும் இத்தலத்தில் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.


🍁இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?


இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் பைரவருக்கு வஸ்திரம் அணிவித்தும், விசேஷ வழிபாடு செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.


 ஓம் நமசிவாய

மோகனா  செல்வராஜ்